search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடைபயணத்தில் எளிமையாக அனைவரையும் கவர்கிறார்: அண்ணாமலையுடன் செல்பி எடுக்க பொதுமக்கள் ஆர்வம்
    X

    அண்ணாமலை வழியில் இஸ்லாமிய பெண் ஒருவரிடம் கைகுலுக்கி நலம் விசாரித்து குறைகளையும் கேட்டறிந்தார்.

    நடைபயணத்தில் எளிமையாக அனைவரையும் கவர்கிறார்: அண்ணாமலையுடன் 'செல்பி' எடுக்க பொதுமக்கள் ஆர்வம்

    • மூத்த தலைவர்களை முந்தியடிக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருந்தது.
    • இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக எதிர்க் கட்சிகளால் குத்தப்பட்ட முத்திரையை தகர்த்தெறியும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன.

    ராமநாதபுரம்:

    2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான சுய பரிசோதனையாக என் மண், என் மக்கள் நடைபயணத்தை தொடங்கியுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தேசத்தையும், தேசியத்தையும் மதிக்கும் மண்ணான ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டு மீண்டும் பிரதமராக பொதுமக்கள் சூளுரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஆன்மீக பூமியான ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்த இந்த பிரமாண்ட நடைபயணம் நேற்று இரண்டாவது நாளில் சற்றும் தளர்வின்றி, மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பகுதியில் தொடங்கி கேணிக்கரை வழியாக அரண்மனை வாசலை அடைந்தது.

    சுமார் 5 கி.மீ. தூரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் அண்ணாமலையுடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். மூத்த தலைவர்களை முந்தியடிக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருந்தது. காரணம் வழிநெடுகிலும் பெண்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினர் மலர்களை தூவி வரவேற்றனர்.

    ஆனால் அண்ணாமலை ஒரு மாநில தலைவர் என்பதை மறந்து, மக்களோடு மக்களான கலந்தார். அதேபோல் செல்லும் வழியெல் லாம் தன்னுடன் செல்பி எடுக்க வந்தவர்களிடம் சிரித்த முகத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஒரு சிலரிடம் அவர்களின் செல்போனை வாங்கி, அவர்களை அருகில் அழைத்து நிற்கவைத்து தானே செல்பி போட்டோ எடுத்து அசரவவைத்தார்.

    நடந்து சென்ற தூரம் 5 கி.மீ. என்றாலும் சற்றும் ஆர்வம் குறையாத அண்ணாமலை யாருடனும் முகம் சுழிக்காமல், முக மலர்ச்சியோடு பேசினார். அதேபோல் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக எதிர்க் கட்சிகளால் குத்தப்பட்ட முத்திரையை தகர்த்தெறியும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன. நடைபயணத்தின் போது தன்னை நோக்கி வந்த இஸ்லாமிய பெண்கள், கிறிஸ்தவ பெண்களிடம் கை குலுக்கியும், நலம் விசாரித்தும் குறைகளை கேட்டறிந்த அண்ணாமலை, அனுபவத்தில் மிளிர்ந்தார்.

    அத்துடன் வழியெங்கிலும் அண்ணாமலையை வரவேற்ற கட்சியினர், பெண்கள் தங்களுடன் அழைத்து வந்த குழந்தையை கொடுத்து வாழ்த்த சொன்னார்கள். அப்போது குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்த அண்ணாமலை அவர்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்க தவறவில்லை.

    மொத்தத்தில் பல்வேறு தலைப்புகளில் நடைபயணம் மேற்கொண்ட முன்னோர்கள், தலைவர்களை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். நடைபயணம் தொடங்கியதில் இருந்து முடிவடைந்த 5 கி.மீ. தூரமும் மிகவும் எளிமையாகவும், நெருங்கியும் வந்த அண்ணாமலை, 3-வது நாளான இன்று முதுகுளத்தூரில் காலை 9.30 மணிக்கு நடைபயணத்தை தொடங்கினார்.

    அங்குள்ள செங்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாலையில் பரமக்குடியில் நடைபயணம் மேற் கொள்கிறார்.

    Next Story
    ×