search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் பி.எச்.டி. படிப்பின் தரம் திருப்தியாக இல்லை- கவர்னர் ஆர்.என்.ரவி
    X

    தமிழ்நாட்டில் பி.எச்.டி. படிப்பின் தரம் திருப்தியாக இல்லை- கவர்னர் ஆர்.என்.ரவி

    • நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெற்று வருவது பெருமைக்குரியது.
    • ஒருசில கல்வி நிறுவனங்களில் மட்டுமே பி.எச்.டி.க்கான கல்வி தரம் சிறப்பாக உள்ளது.

    சென்னை:

    தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு-2024 (என்.ஐ.ஆர்.எப்.) தரவரிசையில் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு விழாவும், தமிழ்நாட்டின் உயர் கல்வி சிறப்பு குறித்த கருத்தரங்கமும் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில், என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் முன்னிலையில் இருந்த 11 உயர் கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளை கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.

    பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெற்று வருவது பெருமைக்குரியது. இந்த நிகழ்ச்சி தற்போது 3-வது முறையாக நடைபெறுகிறது. இதன் நோக்கம் மாநிலத்தில் இருக்கும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்ற கல்வி நிறுவனங்களுடன் கலந்து பணியாற்றாமல் தனியாக செயல்படுவதை மாற்றி, மற்ற கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு ஊக்குவிப்பதாகும்.

    தமிழகத்தில் ஆராய்ச்சி (பி.எச்.டி) படிப்புக்கான கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். பி.எச்.டி. முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அதன் தரம் திருப்திகரமாக இல்லை. ஒருசில கல்வி நிறுவனங்களில் மட்டுமே பி.எச்.டி.க்கான கல்வி தரம் சிறப்பாக உள்ளது.

    எனவே, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பி.எச்.டி. கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். முதுநிலை படிக்கும் போதே இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை (ஜெ.ஆர்.எப்) மற்றும் 'நெட்' தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.

    ஒரு நாடு வளர வேண்டும் என்றால், அந்த நாடு அறிவுசார் சொத்துகளை அமைத்துக்கொள்ள வேண்டும். உலகின் அறிவுசார் சொத்துகளில் சீனா 46 சதவீதம் பெற்றுள்ளது. அதை மனதில் கொண்டு நம் நாட்டின் அறிவுசார் சொத்துகளை உயர்த்துவதற்கு அதிக தரம் கொண்ட பி.எச்.டி. படிப்புகளை கொண்டுவர வேண்டும்.

    கடந்த 2 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் உயர்ந்துள்ளது. மேலும், அறிவுசார் சொத்துகளையும் உருவாக்கி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×