என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் முழுவதும் 83 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது
- சென்னையில் உள்ள மையங்களிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது.
- விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் உள்ள மையங்களிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. இதற்காக மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து ஏற்கெனவே திருத்துதல் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துதல் பணிகள் வருகிற 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த பணியில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். விடைத்தாள் திருத்தி முடிந்ததும் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 6-ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. விடைத்தாள் திருத்துதலின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






