search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    6 செ.மீ மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேக்கம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்  குற்றச்சாட்டு
    X

    6 செ.மீ மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேக்கம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

    • சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவு களப்பணிகள் செய்யவேண்டும்.
    • ஊடகங்களின் உதவியுடன் வீண் விளம்பரம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது என்றார்.

    சென்னை:

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை.

    சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயரத்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது.

    சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ. மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ. மழை பெய்தால் சென்னை என்னவாகும் என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது.

    சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டன, 95 சதவீதம் முடிவடைந்து விட்டன என்று ஊடகங்களின் உதவியுடன் வீண் விளம்பரம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது.

    உண்மையான அக்கறையை களப்பணிகளில் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டியிருந்தால் 6 செ.மீ. மழைக்கு சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது.


    எத்தகைய இடர்ப்பாடுகள் வந்தாலும், எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் நம்மை ஆளும் அரசு நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரவேண்டும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மக்களுக்கு அரசின்மீது அந்த நம்பிக்கை இல்லை என்பதையே பொதுமக்கள் தங்களின் மகிழுந்துகளை வேளச்சேரி பாலத்திலும், பள்ளிக்கரணை பாலத்திலும் நிறுத்தி வைத்திருப்பது காட்டுகிறது.

    மகிழுந்துகளை நிறுத்திவைத்த மக்களில் ஒருவர் கூட தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் தங்கள் பகுதிகளில் மழை நீர் தேங்காது என்று கூறவில்லை. மாறாக, காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை; எங்கள் மகிழுந்துகளை பாலத்தில் தான் நிறுத்துவோம் என்று கூறியிருப்பதன் மூலம் அரசின் மீதான அவர்களின் அவநம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது.

    பாலங்களின் மீது மகிழுந்துகளை நிறுத்துவது போக்குவரத்தின் வேகத்தைக் குறைக்கும் என்பதுதான் உண்மை. ஆனாலும், வேளச்சேரி, பள்ளிக்கரணை பாலங்களில் மகிழுந்துகள் நிறுத்தப்படுவதை எவரும் எதிர்க்கவில்லை. அதன் பொருள், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் கையாலாகாத்தனத்தை மக்கள் புரிந்துகொண்டு விட்டனர் என்பதுதான். தொடக்கத்தில் மகிழுந்துகளை நிறுத்தும் மக்களை மிரட்டியும், அபராதம் விதித்தும் அவற்றை அப்புறப்படுத்தும்படி அச்சுறுத்திய சென்னை மாநகரக் காவல்துறை மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, இப்போது பாலங்களில் நிறுத்தப்படும் மகிழுந்துகளுக்கு நாங்கள் அபராதம் விதிக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளனர்.

    எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வீண் விளம்பரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவுக்கு களப்பணிகளை செய்ய வேண்டும். இது நம்மைக் காக்கும் அரசு என்று எண்ணும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×