search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ள பாதிப்பில் இருந்து ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
    X

    குழந்தையுடன், தாய் அனுசுயா மயில்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வெள்ள பாதிப்பில் இருந்து ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது

    • 3 கிலோ எடை கொண்ட குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரத்தினவேல் தெரிவித்தார்.
    • அரசுக்கும், ஹெலிகாப்டரில் வந்த மீட்புக்குழுவினருக்கும் என்றும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று அனுசுயா மயில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    மதுரை:

    வடகிழக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு பேய் மழை கொட்டித் தீர்த்தது.

    அதிலும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ. மழை பதிவானது. வானத்தை பிளந்துகொண்டு கொட்டிய மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. உணவு, தண்ணீர் இன்றி பொதுமக்கள் தவித்தனர்.

    இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் அருகே தண்டவாள பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பால் திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியதால் அந்த பகுதியை ரெயில் கடக்க முடியவில்லை. அதில் தவித்த 500 பயணிகள் நேற்று ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    அதேபோல் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் வீட்டின் மொட்டை மாடியில் தவித்த நிறைமாத கர்ப்பிணியான அனுசுயா மயில் (வயது 27), அவரது தாயார் சேதுலட்சுமி, பெருமாள் மற்றும் கைக்குழந்தை ஆகிய 4 பேரையும் ஹெலிகாப்டரில் சென்று மீட்டனர்.

    பின்னர் உடனடியாக அவர்கள் அதே ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிறைமாத கர்ப்பிணியான அனுசுயா மயிலுக்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்படி 25-ந்தேதி பிரசவ தேதியாக கொடுக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை அவருக்கு சுகப்பிரசவம் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 3 கிலோ எடை கொண்ட அந்த குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரத்தினவேல் தெரிவித்தார்.

    சரியான நேரத்தில் ஹெலிகாப்டரில் வந்து எங்களை பத்திரமாக மீட்டு உரிய சிகிச்சை அளித்ததன் மூலம் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்து உள்ளேன். அதற்காக அரசுக்கும், ஹெலிகாப்டரில் வந்த மீட்புக்குழுவினருக்கும் என்றும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று அனுசுயா மயில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    Next Story
    ×