search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது
    X

    தனியார் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது

    • சென்னை திருமழிசை பகுதியைச் சேர்ந்த அஜஸ் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார்.
    • விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை.

    திருச்சி:

    திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி ஒரு தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. பஸ்சை சாத்தூரைச் சேர்ந்த அழகுராஜா என்பவர் ஓட்டிச் சென்றார். சென்னை திருமழிசை பகுதியைச் சேர்ந்த அஜஸ் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார்.

    இதில் 28 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் இன்று அதிகாலை 2.15 மணி அளவில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் உள்ள மன்னார்புரம் மேம்பாலத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ்ஸின் பின்பக்க டயர் வெடித்து.

    உடனே சுதாகரித்துக் கொண்ட டிரைவர் பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தினார். இதை அடுத்து சில நொடிகளில் டயர் வெடித்த பகுதியில் தீப்பிடிக்க தொடங்கியது. இதை கவனித்த டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரும் பஸ்ஸில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை எழுப்பி அனைவரையும் கீழே இறக்கினர்.

    இதற்கிடையே சற்று நேரத்தில் தீ வேகமாக மளமளவென பரவி பஸ் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கண்ட்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் 2 வாகனங்களில் உதவி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சத்தியவர்த்தனன் தலைமையில் அங்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் நாலாபுறமும் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பஸ் முற்றிலும் தீக்கிரையாகி எலும்பு கூடானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. ஆனால் பயணிகள் அவசர அவசரமாக இறங்கியதால் சிலரது உடைமைகள் பஸ்ஸில் சிக்கிக் கொண்டது.

    அந்த உடமைகள் தீக்கிரையாகின. பின்னர் அந்த பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் மாற்று பேருந்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறை வீரர்கள் கூறும்போது, சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம். பஸ்ஸின் டீசல் டேங்க் வெடித்து இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். பாலத்தில் கூட சேதாரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

    இந்த தீ விபத்தும் காரணமாக மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

    Next Story
    ×