search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு: போலீசார் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய், மகள் சிறையில் அடைப்பு
    X

    நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு: போலீசார் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய், மகள் சிறையில் அடைப்பு

    • நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    • அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டியில் சாலம்மாள் (வயது50).

    இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக, 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தால் அதன் அருகில் உள்ள சாலம்மாளின் சகோதரியான முனியம்மாள் (60) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதில், சாலம்மாள் தன்னுடைய நிலத்தை நில அளவயர் மூலம் முழுமையாக அளவீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி நிலத்தை அளவீடு செய்ய தாசில்தாரிடம் மனு அளித்து, தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் பாகலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், நில அளவயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டு காரம்பட்டி ஏரி அருகே உள்ள நிலத்தை அளவீடு செய்ய சென்றனர்.

    இந்த நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் கோபமடைந்து அதிகாரிகளிடம் முனியம்மாளும், மாதம்மாளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, நில உரிமையாளர் சாலம்மாள் அவருடன் வந்த உறவினர் மற்றும் தொப்பூர், எஸ்.எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்டோர் மீது முனியம்மாள் அவரது மகள் மாதம்மாள் கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து முனியம்மாள், அவரது மகள் மாதம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×