search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
    X

    திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

    • திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    • பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. தொடர்ந்து நேற்று இரவும் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், இரணியல், பூதப்பாண்டி, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணைகளை பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறையாறு, கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.79 அடியாக இருந்தது. அணைக்கு 1080 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 432 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 532 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.52 அடியாக உள்ளது. அணைக்கு 941 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 14.69 அடியாக உள்ளது. அணைக்கு 199 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கீரிப்பாறை, தடிக்காரங்கோணம், குலசேகரம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 45.8, பெருஞ்சாணி 46, சிற்றார் 1-27.4, சிற்றார் 2-34.2, கன்னிமார் 6.2, கொட்டாரம் 24.2, மயிலாடி 25.4, நாகர்கோவில் 14.6, முக்கடல் 10, பாலமோர் 22.2, தக்கலை 38, குளச்சல் 19.4, இரணியல் 5.2, அடையாமடை 26.4, குருந்தன்கோடு 10.2, கோழிப்போர்விளை 22.4, மாம்பழத்துறையாறு 20.5, களியல் 30.2, குழித்துறை 26.4, புத்தன் அணை 40.2, சுருளோடு 35.4, ஆணைக் கிடங்கு 20, திற்பரப்பு 41.2, முள்ளாங்கினாவிளை 16.8.

    Next Story
    ×