search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளைய தேநீர் விருந்து நடைபெறாது.. ஆளுநர் மாளிகை திடீர் அறிவிப்பு.. ஏன் தெரியுமா?
    X

    நாளைய தேநீர் விருந்து நடைபெறாது.. ஆளுநர் மாளிகை திடீர் அறிவிப்பு.. ஏன் தெரியுமா?

    • சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு.
    • முதலமைச்சர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வைக்க பிரமான்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேநீர் விருந்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், ஆளுநர் மாளிகை அமைந்து இருக்கும் கிண்டியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், நாளையும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருப்பதாலும், நாளை நடைபெற இருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக சுதந்திர தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது..,

    "தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசும் கவர்னரை வன்மையாக கண்டிக்கிறேன். 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடக்கும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கவர்னர் பேசுகிறார். ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் நிலையை உணர மறுக்கிறார் கவர்னர் ரவி."

    "பல சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி தராமல், பல்கலைக்கழகங்களைச் சிதைத்தும், உயர்கல்வித்துறையைக் குழப்பியும் வருகிறார் கவர்னர் ரவி. நீட் தேர்வு மரணங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகள் நமது மனசாட்சியை உலுக்கி வருகிறது. கவர்னரின் செயலை தமிழ்நாடு கல்வித்துறையின் மீது நடத்தும் சதியாகவே பார்க்கிறோம்."

    "சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் கவர்னரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக சுதந்திர தின விழாவையொட்டி, கவர்னர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×