search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இயல்புநிலை திரும்பியதால் 5 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
    X

    ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகுகள்.

    இயல்புநிலை திரும்பியதால் 5 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

    • கடந்த 5 நாட்களாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் ராமேசுவரம் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • மீனவர்கள் இன்று காலை கடலுக்கு சென்றுள்ளது மீனவர் குடும்பங்களில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் மிதிலி புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 13-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். கடலுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது மிதிலி புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் 2-வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் ராமேசுவரம் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், பாம்பன், தொண்டி, ஏர்வாடி, சோழியங்குடி, வாலிநோக்கம், மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள், 15 ஆயிரம் நாட்டு படகுகள், பைபர் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் மட்டும் 1,050-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வருமானமின்றி சிரமப்பட்டனர். இதனால் மீனவர்கள் மாற்று தொழில்களை நாடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வேறு தொழில்களுக்கு செல்லாத மீனவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.

    நேற்று வரை பாம்பன், மண்டபம், ராமேசுவரம் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் கடல் சற்று அமைதியாக காணப்பட்டது. இதையடுத்து மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதியளித்தனர். 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்ததால் இறால், கணவாய், நண்டுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

    5 நாட்களாக மீன்பிடி தொழில் நடைபெறாததால் தினசரி பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்த நிலையில் 5 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு சென்றுள்ளது மீனவர் குடும்பங்களில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×