search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ரவீந்திரநாத்துக்கு அழைப்பு- அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ரவீந்திரநாத்துக்கு அழைப்பு- அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி

    • ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற அவைக்கு தகவல் தெரிவித்தார்.
    • நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை.

    திண்டுக்கல்:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைக்கவும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை சார்பில் இதுகுறித்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கவும், விவாதங்களில் பங்கேற்குமாறும் அமைச்சர் பிரகலாத்ஜோஷி, தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து தான் அந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக ரவீந்திரநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் உள்ள ஒரே எம்.பி. தேனி பாராளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத். இவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில் பொய்யான தகவல்களை அளித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்தார்.

    ஏற்கனவே ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற அவைக்கு தகவல் தெரிவித்தார். இருந்தபோதும் ரவீந்திரநாத் அ.தி.மு.க. உறுப்பினராகவே தொடர்ந்து செயல்பட்டார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். ரவீந்திரநாத்துக்கு மேல்முறையீடு செய்யும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஒரு மாதம் நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார். அதற்கான முயற்சியில் ரவீந்திரநாத் இறங்கி உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    தற்போது அ.தி.மு.க. பிரதிநிதியாக ரவீந்திரநாத் அழைக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×