என் மலர்
தமிழ்நாடு
விளாத்திகுளம் அருகே தனது திருமணத்திற்கு மாட்டுவண்டி பந்தயம் வைத்து அசத்திய பந்தய வீரர்
- செல்வகுமாருக்கும் - அவரது உறவுக்கார பெண்ணான ஆனந்தலட்சுமிக்கும் கடந்த 3-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
விளாத்திகுளம்:
தமிழகத்தில் பெரும்பாலும் தென்மாவட்ட பகுதிகளான தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே அதிகளவில் மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் நடைபெறுவது வழக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் கோவில் கொடை, ஈஸ்டர் பண்டிகை, சந்தனக்கூடு திருவிழா, தலைவர்கள் பிறந்தநாள் என அனைத்து விழாக்களுக்கும் அதிக அளவில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்ற மாட்டு வண்டி பந்தய வீரர், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மாட்டு வண்டிகள் பந்தயங்களில் கலந்து கொண்டு போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த நிலையில் செல்வகுமாருக்கும் - அவரது உறவுக்கார பெண்ணான ஆனந்தலட்சுமிக்கும் கடந்த 3-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
இதையொட்டி மாட்டு வண்டி பந்தயத்தின் மீது கொண்ட தீரா காதல் கொண்ட செல்வக்குமார், தனது திருமணத்தை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடத்தி சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என்று எண்ணி அவரது திருமணத்திற்கு மறுநாளே 4-ந் தேதி அவரது சொந்த ஊரான அரியநாயகிபுரத்தில் மாட்டு வண்டிகள் பந்தயம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் அனுமதி கோரியுள்ளார். ஆனால் போலீசார் 4-ம் தேதி மாட்டுவண்டி பந்தயத்திற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாத சூழல் இருப்பதாக கூறி போட்டி நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தனது திருமணத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்துவது தனது நீண்ட நாள் கனவு என்பதை எடுத்துரைத்து செப்டம்பர் 6-ம் தேதியான கிருஷ்ண ஜெயந்தியன்று விடுமுறை தினத்தில் போட்டிகள் நடத்திக்கொள்ள அனுமதி கேட்டுள்ளார்.
பின்னர் உட்கோட்ட காவல்துறையினர் மாட்டு வண்டிகள் பந்தயத்தை நடத்த அனுமதி அளித்ததையடுத்து நேற்று காலை அரியநாயகி புரத்தில் மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
இப்போட்டியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, தனது திருமணத்தை முன்னிட்டு செல்வக்குமார் நடத்திய மாட்டுவண்டி பந்தயத்தில் சின்ன மாட்டுவண்டிகள் பிரிவில் பங்கேற்ற பந்தய வீரரும், புதுமாப்பிள்ளையுமான செல்வகுமார் 3-ம் இடத்தை பிடித்து வெற்றிப்பெற்றுள்ளார்.
செல்வகுமாரை மாட்டுவண்டி பந்தய வீரர்கள், ரசிகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும் பாராட்டி வாழ்த்திச்சென்றனர்.