search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுழலும் இருக்கை-நவீன கேமிராக்களுடன் தயாராகும் பிரசார வாகனங்கள்- தயாரிப்பு பணி தீவிரம்
    X

    சுழலும் இருக்கை-நவீன கேமிராக்களுடன் தயாராகும் பிரசார வாகனங்கள்- தயாரிப்பு பணி தீவிரம்

    • கட்சி தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் பெரும்பாலும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் செய்யப்பட்டு வருகின்றன.
    • அரசியல் கட்சி தலைவர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில், அவர்கள் கேட்க கூடிய அனைத்து வசதிகளுடன் செய்து கொடுக்கிறோம்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்வற்றை மும்முரமாக செய்து வருகின்றன. வேட்பாளர் தேர்வு முடிந்ததும், வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரசாரத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். வீதி, வீதியாக சென்று மக்களிடம் ஓட்டு சேகரிப்பார்கள்.

    இதற்காக அவர்களுக்கு பிரத்யேக பிரசார வாகனங்களும் தயார் செய்யப்படும். அந்த வாகனங்களில் சென்று தான் அவர்கள் பிரசாரம் செய்வார்கள்.

    அரசியல் கட்சி தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் பெரும்பாலும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் செய்யப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தான் பலருக்கும் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

    இவர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், கேரள முன்னாள் முதல்-மந்திரி கருணாகரன், போன்றவர்களுக்கும் பிரசார வாகனங்கள் தயார் செய்து கொடுத்துள்ளனர்.

    அந்த வகையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தலைவர்களுக்கான பிரசார வாகனம் தயாரிக்கும் பணிகள் கோவையில் தொடங்கிவிட்டது. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தலைவர்களுக்கான பிரசார வாகனம் பிரத்யேக வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அந்த பிரசார வாகனம் தயாரிக்கும் நிறுவத்தின் உரிமையாளரான முகமது ரியாஸ் கூறியதாவது:-

    நாங்கள் 55 வருடங்களுக்கு மேலாக பிரசார வாகனங்கள் தயார் செய்து கொடுக்கும் பணியை செய்து வருகிறோம். பல முக்கிய தலைவர்களுக்கும் நாங்கள் பிரசார வாகனத்தை தயாரித்து கொடுத்துள்ளோம். 95 சதவீதம் நாங்கள் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பிரசார வாகனங்களை தயார் செய்து கொடுக்கிறோம்.

    தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த தலைவர்களுக்கு பிரசார வாகனம் தயாரித்து கொடுத்துள்ளோம்.

    அரசியல் கட்சி தலைவர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில், அவர்கள் கேட்க கூடிய அனைத்து வசதிகளுடன் செய்து கொடுக்கிறோம்.

    முன்பெல்லாம் அரசியல் தலைவர்கள், வீட்டில் இருப்பது போன்ற அனைத்து வசதிகளும் பிரசார வாகனத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினர். அதற்கு ஏற்ப பிரசார வாகனங்களில் படுக்கை, அமருவதற்கு ஷோபா, கழிப்பறை, எல்.இ.டி வி, மற்றும் விளக்குகள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வந்தது.

    ஆனால் தற்போது தலைவர்கள் நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்களை விரும்புவதில்லை.

    அவர்கள் பெரும்பாலும் சுழலும் இருக்கை, திறந்த கூரை, கால்களை அகலமாக நீட்டிக்கொள்வதற்கு வசதியான படிகள், தலைவர்களுடன் வரக்கூடிய பாதுகாவலர்கள், முக்கிய நிர்வாகிகள் நிற்பதற்கு வசதியாக அகலமான படிக்கட்டுகள், பொதுமக்களை பார்க்கும் வகையில் 360 டிகிரி கோணத்தில் சுழலும் சி.சி.டி.வி கேமிராக்கள் இருக்கும் வகையில் அமைத்து தரும்படி தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்ப நாங்களும் வாகனங்களை தயாரித்து வருகிறோம்.

    கூடுதல் வசதிகள் அவர்கள் விருப்பப்பட்டு கேட்டால் அதனையும் செய்து கொடுத்து வருகிறோம்.

    1. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×