search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாடு டிஜிட்டல் மயமானதால் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன- மத்திய மந்திரி எல்.முருகன்
    X

    மத்திய மந்திரி எல்.முருகன் மக்களை சந்தித்து பேசிய காட்சி.

    நாடு டிஜிட்டல் மயமானதால் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன- மத்திய மந்திரி எல்.முருகன்

    • கிராமப்புற டீக்கடையில் கூட டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
    • ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் உலக புகழ் பெற்றுள்ளது என புகழாரம் தெரிவித்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த அய்யன்கொல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நம் நாடு பல்வேறு வகையிலும் வல்லரசு நாடாக மாறி வருவதை வெளிநாடுகள் பாராட்டி வருகின்றன.

    அதற்கு காரணம் இளைய தலைமுறைகளின் அறிவு வளர்ச்சியாகும். விளையாட்டு துறையில் சாதிப்பதற்கு பல புதிய செயல் திட்டங்களை செயல்படுத்தியதால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெரும் வெற்றி கிடைத்தது.

    புதிய கல்வி கொள்கையால் போட்டி தேர்வுகளில் எளிதாக சாதிக்க முடியும். நாடு டிஜிட்டல் மயமானதன் மூலம், கிராமபுறங்களும் வளர்ச்சி கண்டுள்ளன.

    தற்போது கிராமப்புற டீக்கடையில் கூட டிஜிட்டல் பணபரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. வரும் 25 ஆண்டுகளில் இந்தியாவை மிக சிறந்த வல்லரசு நாடாக உருவாக்கும் வகையில், மாணவர்கள் தங்களை தற்போதே முழுமையாக உருவாக்கி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்றார். அங்கு ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் வீட்டிற்கு சென்று, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் உலக புகழ் பெற்றுள்ளது என புகழாரம் தெரிவித்தார்.

    பின்னர் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்ற அவர், ஆவணப்படத்தில் இடம் பிடித்த ரகு மற்றும் பொம்மியை பார்வையிட்டு உணவு வழங்கினார்.

    மேலும் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்படும் முறைகள், யானைகள் பராமரிப்பு, ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படம் எடுக்கப்பட்ட இடங்கள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து அவர் பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு மக்களை சந்தித்து பேசினார். மக்களிடம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், அவை முறையாக வந்து சேர்கிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    தேவர்சோலை பகுதிக்கு சென்ற போது, அங்கிருந்த தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு பல ஆண்டுகளாக சம்பளம் கொடுக்கவில்லை என புகார் தெரிவித்து மனு அளித்தனர். அதனை மத்திய மந்திரி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பந்தலூர் நெல்லியாளம் பகுதிக்கு சென்று அங்கு பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    Next Story
    ×