search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம்: பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லும்- சுப்ரீம் கோர்ட்
    X

    பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம்: பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லும்- சுப்ரீம் கோர்ட்

    • சமுதாய அக்கறையுள்ள அரசு என கூறும்போது, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதும் உங்களது வேலைதானே? என்று தெரிவித்தனர்.
    • தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    இதையடுத்து பட்டாசு ஆலை விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணத்தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    இதேப்போல் காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத்தொகையை பிரதமர் நரேந்திர மோடியும் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 10 லட்சமும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் இந்த தொகையை பட்டாசு குடோன் உரிமையாளரிடம் இருந்து மாநில அரசு வசூலிக்கலாம், அதில் தீர்ப்பாயம் எந்த நிபந்தனையும் இல்லாமல் அனுமதி வழங்குகிறது என்றும் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு இருந்தது.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தொடர்ந்தது.

    இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

    அப்போது நீதிபதிகள் இத்தகைய பட்டாசு ஆலைகள் ஒழுங்காக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது அரசின் வேலையாகும்.

    மேலும், சமுதாய அக்கறையுள்ள அரசு என கூறும்போது, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதும் உங்களது வேலைதானே? என்று தெரிவித்தனர்.

    தமிழக அரசு தரப்பில் கூறும்போது, இழப்பீடு வழங்குவதில் எந்த தயக்கமும், பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை எவ்வளவு வழங்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை நிர்ணயம் செய்யவும் முடியாது.

    அவ்வாறு இழப்பீட்டை நிர்ணயம் செய்ய தொடங்கினால், இதுதொடர் பழக்கமாக மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்ததில் எந்த முகாந்திரமும் இல்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும், சொத்து குவிப்பு வழக்கு தண்டனையை எதிர்த்து பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×