search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொசஸ்தலை ஆற்று உபரிநீரை சேமிக்க 4 இடங்கள் தேர்வு- ரூ.5.6 கோடி ஒதுக்கீடு
    X

    கொசஸ்தலை ஆற்று உபரிநீரை சேமிக்க 4 இடங்கள் தேர்வு- ரூ.5.6 கோடி ஒதுக்கீடு

    • பருவ மழையில் பூண்டி ஏரி நிரம்பும் போது கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும்.
    • கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையிலும் குடிநீருக்கு பயன்படுத்தும் வகையிலும் உபரிநீரை தேக்கி வைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    திருவள்ளூர்:

    சென்னை நகரப் பகுதியில் 2035-ம் ஆண்டுக்குள் தினசரி குடிநீர் தேவை 2,522 மில்லியன் லிட்டராக உயரும் என்று அதிகாரிகள் கணக்கிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் ஆதாரங்களை அதிகரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.

    பருவ மழையில் பூண்டி ஏரி நிரம்பும் போது கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும். இதனால் பல லட்சம் கனஅடி உபரி நீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. மேலும் அதிக அளவு உபரி நீர் திறக்கப்படும்போது கரையோர குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பலத்த வெள்ள சேதமும் ஏற்படுகிறது.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையிலும் குடிநீருக்கு பயன்படுத்தும் வகையிலும் உபரிநீரை தேக்கி வைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஆய்வுகள் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீரை சேமித்து வைக்க பூண்டி ஏரியில் இருந்து மேல்நிலை மற்றும் கீழ்நிலை பகுதிகளில் மொத்தம் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் உள்ள மானாவூர் ரெயில் பாதை மற்றும் காவேரிப்பாக்கம் குளம், பட்டரை பெருமந்தூர் இடையே 2 இடங்களில் தடுப்பு அணை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    பூண்டி நீர்த்தேக்கத்தின் கீழ்நிலையில் இருளிப்பட்டு தடுப்பணைக்கும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டுக்கும் இடையிலும், பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் அணைக் கட்டுக்கு இடையே 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பணிக்காக ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    உபரி நீரை தேக்குவதன் மூலம் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதுடன், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல், வட சென்னையில் சடையங் குப்பம்-எடையஞ்சாவடியில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் 600 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்படும் இந்த ஆய்வு இன்னும் 6 மாதங்களில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×