search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஸ்டிரைக்
    X

    திருப்பூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் 'ஸ்டிரைக்'

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.
    • வேலை நிறுத்த போராட்டத்தால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 3பி-யில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் உள்ள சிறு, குறு பனியன் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், பனியன் தொழில் சார்ந்த சைமா, டீமா, டெக்பா, நிட்மா உள்ளிட்ட 19 தொழில் அமைப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பல்லடம் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு "எல்.டி 111பி "என்ற மின் இணைப்பு உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது. தொழில் இயக்காவிட்டாலும் அதிகபட்சமாக நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான மின் கட்டண செலவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

    இதற்கிடையே அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த செப்டம்பர் 7-ந் தேதி பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதன் அடுத்தகட்ட போராட்டமாக செப்டம்பர் 11 முதல் 24-ந்தேதி வரை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம், இ-மெயில், அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    இன்று தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்தும் தொழிற்சாலைகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றும் போராட்டமும் நடைபெறுகிறது. மேலும் கடந்த காலங்களில் கோரிக்கைகளுக்காக ஒவ்வொரு சங்கங்களும் தனித்தனியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. தற்போது தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் 170-க்கும் அதிகமான சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளன. முதல் முறையாக தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த குறு சிறு தொழில் நிறுவனங்களும் மின் கட்டண உயர்வுக்காக கைகோர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளன. முதலமைச்சர் எங்களது நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×