search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்பெயின் பயணம் சாதனை பயணம்: மு.க.ஸ்டாலின்
    X

    ஸ்பெயின் பயணம் சாதனை பயணம்: மு.க.ஸ்டாலின்

    • 'ஹபக் லாய்டு' நிறுவனம் 2500 கோடி ரூபாய் முதலீடு, எடிபன் நிறுவனம் 540 கோடி ரூபாய் முதலீடு, ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது.
    • தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும், உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு அரசு முறை பயணமாக கடந்த மாதம் 27-ந்தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார். 12 நாட்கள் வெளிநாட்டில் இருந்த அவர் தமிழகத்துக்கு ரூ.3440 கோடிக்கு தொழில் முதலீட்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வந்து உள்ளார்.

    இன்று காலை 8 மணியளவில் சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    வரவேற்பை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உங்கள் வாழ்த்துகளையெல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற நான் தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டு திரும்பி இருக்கிறேன்.

    அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த ஜனவரி 29-ந்தேதி சென்றேன். முதல் நிகழ்வாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களுடன் நிர்வாகிகள் பங்கேற்ற முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது.

    அதற்கு ஸ்பெயின் நாட்டில் இருக்கிற பல்வேறு தொழில் குழும நிர்வாகிகள் வந்திருந்தார்கள். ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், 'இன்ஸ்வெஸ்ட் ஸ்பெயின்' என்ற அமைப்பை சார்ந்தவர்களை சந்தித்தேன்.

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு இருக்கக்கூடிய உகந்த சூழல் பற்றி அங்கு எடுத்துச்சொல்லி, மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

    அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில், ஸ்பெயின் நாட்டில் செயல்படுகிற முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித் தனியாக நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.

    தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்று அப்போது கேட்டுக் கொண்டேன். சில முக்கிய நிறுவனங்களின் பெயர்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

    காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் மறுசுழற்சியிலும் முன்னணி நிறுவனமான ஆக்கியானா நிறுவனம் உயர்தர வீட்டு கட்டுமான பொருட்களின் உற்பத்தியிலும், பீங்கான் பொருட்கள் உற்பத்தியிலும், உலகின் முன்னணி நிறுவனமான ரோக்கா நிறுவனம், கன்டெய்னர் முனையங்கள் மற்றும் சரக்கு பூங்காக்கள் அமைப்பதில் சிறந்த நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவனம், சர்வதேச தரத்தில் சாலை கட்டமைப்பு வசதிகள் அமைக்கக்கூடிய அபர்ட்டிஸ் நிறுவனம், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில், உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய கெஸ்ட்ராம் நிறுவனம், ரெயில்வே சார்ந்த உற்பத்தி தொழிலில் உயர் தொழில் நுட்பத்துடன் செயல்படக்கூடிய 'டால்கோ' நிறுவனம், பொறியியல் வடிவமைப்பு மற்றும் பொறியியல் கல்வித் திறன் பயிற்சிக்கான நவீன கருவிகளை உற்பத்தி செய் கிற 'எடிவான்' நிறுவனம், உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான 'மேப்ட்ரி' நிறுவனம் ஆகிய நிறுவனங்களோடு, நிர்வாகிகளை நான் சந்தித்தேன்.

    இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எல்லோரும், தங்களது தொழில் திட்டங்களை விளக்கியும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தங்களது ஆர்வத்தையும் தெரிவித்தார்கள்.

    இந்த முயற்சிகளின் பயனாக 3440 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    'ஹபக் லாய்டு' நிறுவனம் 2500 கோடி ரூபாய் முதலீடு, எடிபன் நிறுவனம் 540 கோடி ரூபாய் முதலீடு, ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது.

    இந்த நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து எதிர்காலத்திலே, தங்களது முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்பதிலே நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும், உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

    தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கிய பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.

    உற்பத்தி துறையிலே சீனாவுக்கு மாற்றாக இந்தியா கருதப்பட்டு வரும் இந்த வேளையில், அந்த உற்பத்தி துறையில், முந்தி செயல்படுகிற மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வருவதையும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகளும் வருகின்றன.

    தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அந்த செய்தி சுட்டிக்காட்டி இருக்கிறது.

    இந்தியா பயணிக்கக்கூடிய பாதையில் முந்தி பயணிப்பது மட்டுமல்ல தமிழ்நாடு தனக்கென்று தனிப்பாதையை வகுத்து செயல்பட்டு வருவதாகவும் முதல் பக்கத்தில் செய்தி போட்டுள்ளது. பாராட்டியும் உள்ளது.

    இதுபோன்ற பாராட்டுகள்தான் எங்களை மேலும் உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கிறது. தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தும் எங்கள் பயணத்துக்கு ஸ்பெயின் பயணம் மிக மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    இதுபோன்ற அடுத்த பயணங்கள் திட்டமிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கேள்வி:- வெளிநாடுகளுக்கு நீங்கள் பயணம் மேற்கொண்டு வரும்போது முதலீடுகள் அதிகளவு ஈர்க்கப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக வேறு ஏதும் நாடுகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?

    பதில்:- திட்டமிடும்போது உங்களிடம் சொல்லிவிட்டு செய்கிறேன். பாராளுமன்ற தேர்தல் இப்போது நெருங்கி வருவதால் அதற்கு பிறகுதான் என்னுடைய பயணங்கள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் சேர்ந்து ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர்.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தா.மோ. அன்பரசன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், ரகுபதி, தங்கம் தென்னரசு, சிவசங்கர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சாமிநாதன், கா.ராமச்சந்திரன், கீதா ஜீவன், ஜெகத் ரட்சகன் எம்.பி., பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, இனிகோ இருதயராஜ், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், புழல் நாராயணன், படப்பை மனோகரன், கோல்டு பிரகாஷ், பம்மல் வே.கருணாநிதி.

    அரசு உயர் அதிகாரிகளான தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

    விமான நிலையத்துக்கு வெளியே சாலையின் ஓரம் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×