search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த கும்பலை பிடிக்க தனிப்படை விரைவு: பதட்டம் நீடிப்பு-போலீஸ் குவிப்பு
    X

    பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த கும்பலை பிடிக்க தனிப்படை விரைவு: பதட்டம் நீடிப்பு-போலீஸ் குவிப்பு

    • பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார்.
    • ஜேடர்பாளையம் அருகே சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுக்கா கரப்பாளையம் பகுதியில் பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார். அன்று முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவைப்பு சம்பவங்கள், வன்முறை நடைபெற்று வந்தது.

    இதன் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் அருகே சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    ஜேடர்பாளையம் அருகே உள்ள பொத்தனூர் பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் சவுந்தர்ராஜன் (55). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூர் பகுதியில் உள்ளது. இதில் 3 ஏக்கர் நிலத்தில் பாக்கு மரங்களையும், மீதியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு மற்றும் தென்னை பயிர் செய்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சவுந்தரராஜனின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த தங்கமுத்து சென்றுள்ளார். அப்போது சவுந்தரராஜன் நிலத்தில் பயிர் செய்திருந்த பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சவுந்தரராஜனுக்கு தகவல் தெரிவித்தார்.

    தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 1800 பாக்கு மரங்கள் அனைத்தையும் மர்ம நபர்கள் வெட்டிச் சாய்த்துள்ளதை பார்த்த சவுந்தர்ராஜன் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாக்கு மரங்களை வெட்டிவிட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கோவை மண்டல ஐ.ஜி சுதாகர் மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி ஆகியோர் சவுந்தரராஜன் தோட்டத்திற்கு சென்று மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட பாக்கு மரங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து எஸ்.பி. ராஜேஷ்கண்ணா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாக்கு மரங்களை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தனிப்படை போலீசார் தனித்தனி குழுவாக ஆனங்கூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வீட்டில் உள்ளவர்கள் பெயர்கள், அவர்களுடைய செல்போன் எண்களைப் பெற்றும், பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் இந்த பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

    Next Story
    ×