search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் 2-ம் நாளாக கனமழை: பஸ் வராததால் லாரியில் ஏறி பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
    X

    பஸ் வராததால் காலாண்டு தேர்வு எழுத கொடைக்கானலில் லாரியில் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள்.

    கொடைக்கானலில் 2-ம் நாளாக கனமழை: பஸ் வராததால் லாரியில் ஏறி பள்ளிக்கு சென்ற மாணவர்கள்

    • தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின.
    • கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் 3 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அருவிகள் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து சென்றனர். இதனிடையே வனத்துறைக்கு கட்டுப்பட்ட பேரிஜம் ஏரி, மோயர் பாயிண்ட், குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று 2-வது நாளாக கொடைக்கானல் நகர் மற்றும் மலை கிராமங்களில் கன மழை பெய்தது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    கொடைக்கானல் மேல்மலை, தாண்டிக்குடி, கீழ்மலைப்பகுதிகளில் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் கடும் சிரமத்தை மக்கள் சந்தித்தனர்.

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஊருக்கு வெளியே 6 கி.மீ தூரத்தில் உள்ள இந்த பள்ளிக்கு காலை 9 மணிக்கு வரும் அரசு பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகின்றனர். கனமழை காரணமாக இப்பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் 2 ணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இங்கு வரும் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டது.

    காலாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளிக்கு செல்ல தயார் நிலையில் இருந்த மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனையடுத்து தனியாருக்கு சொந்தமான லாரிகளில் மாணவ-மாணவிகள் ஏறி மாற்று வழியில் பள்ளிக்கு சென்றனர். ஒரு சில மாணவிகள் கூட்ட நெரிசலில் லாரியில் செல்ல தயங்கி மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் தேர்வை புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது பூம்பாறை செல்லும் வழித்தடத்தில் மரங்கள் முறிந்து விழுந்ததால் அரசு பஸ் இயக்க முடியவில்லை. மரங்கள் வெட்டி அகற்றியபின் பஸ் இயக்கப்படும் என்றார்.

    மேல்மலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×