search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    4 திசைகளிலும் சீறிப்பாய்ந்தன- விமானங்களின் சாகசத்தை 15 லட்சம் பேர் கண்டு களித்தனர்

    • காலை 10 மணியளவில் மெரினா கடற்கரை மணற் பரப்பு முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன.
    • வண்ண புகைகளை கக்கிய படியே மிக அருகாமையில் வட்டமிட்டபடியே பறந்து சென்றன.

    சென்னை:

    இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

    இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி என்பதால் அதனை கண்டு ரசிக்க பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருந்தது.

    விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மெரினா கடற்கரைக்கு இன்று காலை 7 மணியில் இருந்தே பொதுமக்கள் வர தொடங்கினார்கள். கோவில் திருவிழாக்களுக்கு செல்வது போன்று கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் மெரினா கடற்கரை நோக்கி பொதுமக்கள் குடும்பத்தோடு படையெடுத்தனர்.

    மெரினா கடற்கரை சாலை பகுதி மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அமதிக்கப்படவில்லை. இதனால் தங்களது வாகனங்களை தூரத்திலேயே நிறுத்தி விட்டு கடற்கரைக்கு மக்கள் நடந்தே சென்றனர்.

    காலை 10 மணியளவில் மெரினா கடற்கரை மணற் பரப்பு முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. 11 மணிக்கு சாகச நிகழ்ச்சி தொடங்கியதும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதனை கண்டு ரசித்தார்கள்.

    சிறுவர்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருமே விமான சாகச நிகழ்ச்சியை கைதட்டி ரசித்து மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்கள். விமானங்கள் தொடர்ச்சி

    க சாகசத்தில் ஈடுபட்டதை மெய்சிலிர்த்த படியே கண்டு ரசித்தனர். தங்களது செல்போன்களில் சாகச காட்சிகளை வீடியோக்களாகவும் படம் பிடித்தனர்.

    இன்று காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில் சாகச நிகழ்ச்சி தொடங்கிய போது வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள மிகுந்த உற்சாகத்தோடு சாகச நிகழ்ச்சிகளை பிரமித்து பார்த்தார்கள்.




    இதன் காரணமாக மெரினா கடற்கரை பகுதி காணும் பொங்கல் தினத்தன்று காணப்படுவது போல களை கட்டி கோலாகலமாக காட்சியளித்தது. விமான சாகசத்தில் ஈடுபட்ட வீரர்கள் விமானத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்கியும், பாராசூட் மூலம் கீழே குதித்தும் சாகசத்தில் ஈடுபட்டனர்.

    அதனை கடற்கரை மணற் பரப்பில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மிரட்சியோடு கண்டு ரசித்ததை காண முடிந்தது.

    சாகசத்தில் ஈடுபட்ட விமானங்கள் 4 திசைகளிலும் பயங்கர சத்தத்தோடு சீறிப் பாய்ந்தன. அப்போது வண்ண புகைகளை கக்கிய படியே மிக அருகாமையில் வட்டமிட்டபடியே பறந்து சென்றன. இது கூடியிருந்த பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்திருந்தது.

    மெரினா கடற்கரையில் மட்டும் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வரை விமான சாகசத்தை இன்று கண்டு களிக்கின்றனர்.



    மெரினாவில் நடைபெறும் இந்த விமான சாகச நிகழ்ச்சியை கோவளம் முதல் மெரினா வரை உள்ள கடற்கரை பகுதி முழுவதும் கண்டு களிக்கலாம் என விமானப் படை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இதன்படி கோவளத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிகள் மற்றும் மயிலாப்பூர், சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதுமே இன்று தங்கள் வீட்டு மாடிகளில் நின்றபடி பொதுமக்கள் விமான சாகசத்தை கண்டு ரசித்தனர்.

    இதன் மூலம் 15 லட்சம் பேர் வரை இன்றைய விமான சாகசத்தை கண்டு ரசித்ததாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சாகச நிகழ்ச்சி விமான சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

    Next Story
    ×