என் மலர்
தமிழ்நாடு
பொங்கல் பணம் வங்கி கணக்கில் செலுத்த அதிரடி உத்தரவிட்ட உணவு வழங்கல் துறை
- வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் விவரம் ஒவ்வொரு கடைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
- வங்கி கணக்கு இல்லாதவர்கள், ஆதாருடன் இணைக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்படுவதோடு குறைந்த விலையில் பாமாயில், பருப்பு, சர்க்கரை ஆகியவையும் வினியோகிக்கப்படுகிறது.
2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இதன்மூலம் பயன் அடைந்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்கக்கூடிய நிலை உள்ளது. குடும்பத்தை சாராதவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது.
இந்த நிலையில் ஸ்மார்ட் கார்டுடன் ஆதார் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வங்கி கணக்குடன் பெரும்பாலானவர்கள் ஆதார் எண்ணை இணைத்தனர்.
ஒரு சிலர் இன்னும் ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் தமிழகத்தில் 18 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காமல் இருப்பதால் ரேஷன் கார்டுடன் இணைக்க முடியாமல் உள்ளது.
வங்கி கணக்கு இல்லாமல் சிலர் ஆதார் இணைக்காமல் இருப்பதால் ரேஷன் கார்டும் இணையாமல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவு வழங்கல் துறை மூலம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் விவரம் ஒவ்வொரு கடைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாதவர்கள், ஆதாருடன் இணைக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை எண், குடும்ப உறுப்பினர் பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இதுவரையில் வங்கி கணக்குடன் ஆதார் எண்களை இணைக்காத ரேஷன் கார்டுதாரர்களிடம் இந்த மாத இறுதிக்குள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்று சிவில் சப்ளை துறை உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வங்கி கணக்கு தொடங்காமல் இருந்தவர்கள் தற்போது புதிதாக தொடங்கி ஆதார் எண்ணை இணைந்த விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.
அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். ரொக்கமாக வழங்கலாமா என ஆலோசிக்கப்படுகிறது. வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது எளிதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு பரிசீலிக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'அரசின் திட்டங்கள் மக்களுக்கு வங்கி கணக்கு மூலம் நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக வங்கி கணக்கு தொடங்காமல் ஆதார் இணைக்காமல் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொங்கல் பணம் இந்த வருடம் வங்கி கணக்கில் செலுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது' என்றனர்.