என் மலர்
தமிழ்நாடு
பள்ளி பெயர் பலகையில் நடிகர் பிறந்தநாள் போஸ்டர்- விடுதலை சிறுத்தை கட்சியினர் திரண்டதால் பரபரப்பு
- பள்ளியின் பெயர் பலகை மீது நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியிருந்தனர்.
- போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூரை அடுத்த அலமேலு மங்காபுரத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பள்ளியின் பெயர் பலகை மீது நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 2-ம் பகுதி செயலாளர் ரீகன் தலைமையில் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், பள்ளி சுவர் மீது சினிமா விளம்பர போஸ்டர் ஒட்டக்கூடாது. ஆனால் இங்கு பள்ளியின் பெயர் பலகை மீது 2 போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் திங்கட்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர். இந்த சம்பவம்அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.