search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சட்டமன்ற உறுப்பினராக நாளை பதவியேற்கிறார் அன்னியூர் சிவா
    X

    சட்டமன்ற உறுப்பினராக நாளை பதவியேற்கிறார் அன்னியூர் சிவா

    • தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
    • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.

    சென்னை:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி, இடைத்தேர்தலை சந்தித்தது. தி.மு.க.சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சாா்பில் டாக்டா் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் இடைத்தேர்தலை புறக்கணித்ததால், இங்கு மும்முனை போட்டி நிலவியது.

    இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. இதில் 82.47 சதவீதம் வாக்குகள் பதிவாயின. அதாவது மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில், 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர்.

    இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. இதில் தபால் ஓட்டுகள் தொடங்கி இறுதி சுற்று முடிவு வெளியாகும் வரைக்கும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவின் கைதான் ஓங்கி இருந்தது.

    இறுதி சுற்றின் முடிவில் தி.மு.க.வை சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றார்.

    இதன் மூலம் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், வெற்றிச்சான்றிதழை அன்னியூர் சிவாவுக்கு, வழங்கினார். அப்போது அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் தி மு க நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதையடுத்து, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து பெற்றார்.

    இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா நாளை பதவியேற்கிறார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    Next Story
    ×