என் மலர்
தமிழ்நாடு
சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு
- சென்னை மாநகர் முழுவதும் சுமார் 2 ஆயிரம் இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- மற்ற பகுதிகளில் பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் அந்தந்த பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.
சென்னை:
தமிழகம் முழுவதும் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
சென்னை மாநகர் முழுவதும் சுமார் 2 ஆயிரம் இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர சிறிய சிலைகளையும் பொதுமக்கள் தங்களது பகுதி மற்றும் வீடுகளில் வைத்து வழிபடுவார்கள். இதுபோன்று சென்னையில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட உள்ளன.
இந்த சிலைகளை 4 இடங்களில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வருகிற 18-ந்தேதி பூஜைக்காக வைக்கப்படும் சிலைகளை இந்து அமைப்பினர் ஒருவாரம் வைத்து பூஜை செய்வார்கள்.
பின்னர் அந்த சிலைகளை 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க உள்ளனர்.
இதற்காக சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்படும் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று மற்ற பகுதிகளில் பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் அந்தந்த பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.
விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைப்பதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் இந்து அமைப்பினருடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அடுத்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இறுதியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த கூட்டத்துக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி தொடர்பாக பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி 20 ஆயிரம் போலீசார் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.