search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • செம்மறி ஆடு 1 ஜோடி ரூ.80 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
    • 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனை வாங்குவதற்காகவும் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று சந்தைக்கு ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை வாங்குவதற்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாலையிலேயே சந்தையில் குவிந்தனர். செம்மறி ஆடு 1 ஜோடி ரூ.80 ஆயிரம் வரை விற்கப்பட்டது. 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

    மருக்கை ஆடுகளையும் விவசாயிகள் வளர்ப்புக்காக அதிக அளவில் வாங்கிச் சென்றனர். நாட்டுக்கோழி ரூ.380 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. கட்டுச்சேவல்கள் ரூ.3000 முதல் ரூ.30,000 வரை விற்பனையானது. சேவல்களை சந்தையிலேயே விளையாட வைத்து அதன் தரத்தை ஆய்வு செய்து வாங்கிச் சென்றனர்.

    வழக்கமாக காலை 5 மணிக்கே ஆடு, கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இன்று சந்தை தொடங்கிய 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் தற்போது பல்வேறு கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் அதற்காகவும் ஆடுகள் வாங்கிச் செல்லப்பட்டன.

    மதுரையைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் 100 ஆடுகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை தங்கள் வீட்டில் ஒரு வாரத்துக்கு முன்பே வளர்த்து பண்டிகை நாளில் அதன் இறைச்சியை 3 கூறுகளாக பிரிப்பார்கள். ஒரு பகுதியை இயலாதவர்களுக்கும், மற்றொரு பகுதியை தங்கள் உறவினர்களுக்கும், மீதமுள்ள பகுதியை தங்கள் குடும்பத்துக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

    வருடத்தில் ஒரு முறை குர்பானி கொடுக்க வேண்டும் என்ற இஸ்லாமியர்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அய்யலூர் சந்தைக்கு ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்தனர்.

    வழக்கமாக தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே இது போன்ற விற்பனை நடைபெறும் நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகைக்கும் விற்பனை அதிகரித்துள்ளது என்றனர்.

    Next Story
    ×