search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க சொல்வதா?- திருப்பூர் துரைசாமிக்கு பூமிநாதன் எம்.எல்.ஏ. கண்டனம்
    X

    ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க சொல்வதா?- திருப்பூர் துரைசாமிக்கு பூமிநாதன் எம்.எல்.ஏ. கண்டனம்

    • ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று தலைமை கழகத்திற்கு அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதி இருப்பது கண்டனத்திற்குரியது.
    • தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைப்பது தொடர்பான திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை ம.தி.மு.க.வினர் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று தலைமை கழகத்திற்கு அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதி இருப்பது கண்டனத்திற்குரியது. ஆரம்ப காலம் முதலே அவர் தலைமையின் கருத்துக்கு எதிர் கருத்துக்களை தான் கூறி வருகிறார். தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தாலும் ம.தி.மு.க.வுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது.கட்டுப்பாடான கொள்கை கொண்ட கட்சி ம.தி.மு.க.

    தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைப்பது தொடர்பான திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை ம.தி.மு.க.வினர் முழுமையாக புறக்கணிக்க வேண்டும். பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயத்தை பொது வெளியில் வெளியிடுவது முறையல்ல.

    வாரிசு அரசியல் என்று அவர் குறிப்பிடுவது முறையற்ற கருத்தாகும். தலைமை நிலைய செயலாளராக துரை வைகோவை தேர்ந்தெடுப்பதற்கு வைகோ விரும்பவில்லை. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் முழு சம்மதத்தோடுதான் கட்சியின் விதிப்படிதான் அவர் தலைமை நிலைய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அந்த பதவிக்கு பொறுப்பானவர்தான்.இதில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை. கட்சி தலைமைக்கு அவர் தகுதியானவர்தான்.

    பொதுவாக கட்சியில் நிர்வாகிகளெல்லாம் தேர்ந்தெடுக்கப்படும்போது கட்சி கட்டுப்பாட்டை விதி முறைகளுக்கு உட்பட்டு தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது.

    ஒரு பதவிக்கு இரண்டுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுவது இயல்பான முறை. அதில் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு பேசி தலைவர் சமாதானம் செய்துவிடுவார். கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை நேரடியாக சந்தித்துப்பேசும் தலைவர் வைகோ. உடல் நிலை சரியில்லாத போதுகூட அவர் சோர்வடைந்தது இல்லை. அவரால் கட்சியில் அனைவரும் உற்சாகத்துடன்தான் இருக்கிறார்கள். ஆரம்ப காலம் முதல் கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை திருப்பூர் துரைச்சாமி வழக்கமாகக் கொண்டு உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×