search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாகர்கோவில் மார்க்கெட்டில் வாழை இலை ஒரு கட்டு ரூ.1,500-க்கு விற்பனை
    X

    நாகர்கோவில் மார்க்கெட்டில் வாழை இலை ஒரு கட்டு ரூ.1,500-க்கு விற்பனை

    • விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினம் அடுத்தடுத்து வந்ததையடுத்து வாழை இலையின் தேவை அதிகரித்தது.
    • வழக்கமாக ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தருவார்கள்.

    நாகர்கோவில்:

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் சுப முகூர்த்த தினங்களாகும். இதனால் நாகர்கோவில் வடசேரி மார்க்கெட், அப்டா மார்க்கெட்டில் வாழை இலையின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

    அப்டா மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி நெல்லை மாவட்டம் களக்காடு, ஏர்வாடி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்காக வருகிறது. 150 இலைகள் கொண்ட ஒரு கட்டு கடந்த வாரம் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஆனால் இன்று விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.1500-க்கு விற்பனையானது. ஒரு இலை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வாழைத்தார்கள் விலையும் உயர்ந்து காணப்பட்டது. ரசகதலி வாழைக்குலை குமரி மாவட்டம் மட்டுமின்றி, நெல்லை மாவட்டத்தில் இருந்தும் அப்டா மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக வாழைக்குலைகளின் விலை உயர்ந்தே உள்ளது. தற்போது வாழைக்குலை வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகள் வருவதால் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு வாழைத்தார் ரூ.450 முதல் ரூ.800 வரை விற்பனையானது.

    இதே போல் செவ்வாழை, ஏத்தன், நாட்டுப்பழம், பச்சை பழம் உள்ளிட்ட அனைத்து வாழைத்தார்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினம் அடுத்தடுத்து வந்ததையடுத்து வாழை இலையின் தேவை அதிகரித்தது. இதனால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு விலை உயர்ந்து காணப்படும். வாழைத்தாரை பொருத்தமட்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்தாலும் வியாபாரிகள் போட்டி போட்டு வாலைத்தார்களை வாங்கி செல்கிறார்கள்.

    வழக்கமாக ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படாது என்று அந்த மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார். இருப்பினும் வாழைத்தார்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வியாபாரிகள் வருகிறார்கள். எனவே இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×