search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மீது வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ. முடிவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மீது வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ. முடிவு

    • சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரணமா ஆகிய இருவருக்கும் சிக்கல் ஏற்படும்.
    • குட்கா ஊழல் நெட்வொர்க்கில் மேலும் பல பிரபலங்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கும் சி.பி.ஐ. நடவடிக்கை ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதை பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்து அறிவித்துள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கிறது. என்றாலும், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குட்கா ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள குட்கா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அவர்களது குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் ஏராளமான ஆவணங்கள் மற்றும் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

    அந்த டைரியில் சென்னையில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்வதற்காக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்கள் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து அந்த டைரி தகவலை டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. குட்கா பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அ.தி.மு.க. அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதையடுத்து குட்கா விற்பனையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் எனவே இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் அப்போதைய எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

    அதன் பேரில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டனர்.

    அடுத்தடுத்து நடந்த அதிரடி நடவடிக்கைகளால் குட்கா விற்பனையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது. குறிப்பாக அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர்கள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் உளவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

    குறிப்பாக சென்னை புறநகரில் குட்கா, பான் மசாலா போதை பொருட்களை இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும் லஞ்சம் கொடுக்கப்பட்ட வகையில் சுமார் ரூ.40 கோடி பணம் கைமாறி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. 2 ஆண்டுகளில் இந்த தொகை வழங்கப்பட்டதாகவும் டைரி தகவல் மூலம் தெரியவந்தது.

    சி.பி.ஐ.யை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்கள். பணப் பரிமாற்றம் நடந்தது பற்றி அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அதன் பிறகு அவர்கள் குட்கா தயாரிப்பாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து ஆவணங்களை கைப்பற்றி , சுமார் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கினார்கள். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீது முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

    2-வது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகி இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் இருந்தது. இந்த நிலையில் தற்போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தயாராகி உள்ளனர்.

    டெல்லி சி.பி.ஐ.யின் 3-வது லஞ்ச ஒழிப்பு பிரிவின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குட்கா ஊழல் தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, மற்றும் ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகிய முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ.யிடம் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்படும் என்று தெரிகிறது. தமிழக அரசின் பரிந்துரைகள் உள்ளடங்கிய பதிலாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது.

    முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் மத்திய அரசின் ஒப்புதல் அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு சில பரிந்துரைகளை அளித்து தமிழக அரசு கடிதம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு கொடுக்கும் ஒப்புதலைத் தொடர்ந்து சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கும் என்று தெரிகிறது.

    சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரணமா ஆகிய இருவருக்கும் சிக்கல் ஏற்படும். ஆனால் குட்கா ஊழல் நெட்வொர்க்கில் மேலும் பல பிரபலங்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கும் சி.பி.ஐ. நடவடிக்கை ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    Next Story
    ×