search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிசாமி வாக்குவாதம்
    X

    தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிசாமி வாக்குவாதம்

    • எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என தெரிவித்தார்.
    • எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதியுங்கள், நான் பதில் சொல்ல தயார், ஓடி ஒளிய மாட்டேன்.

    தமிழக சட்டசபையில் இன்று 11.30 மணியளவில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசினார்.

    அப்போது அவரது மைக் 'ஆப்' செய்யப்பட்டிருந்தது. அவர் பேசுவதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படவில்லை.

    சபாநாயகர் அப்பாவு, எடப்பாடி பழனிசாமியை பார்த்து நீங்கள் அமருங்கள். உங்களுக்கு நேரம் தனியாக ஒதுக்கப்படும். அப்போது பேசுங்கள். உரிமை மீறல் ஒன்று வந்துள்ளது. அதன் பிறகு உங்களுக்கு பேச அனுமதி தருகிறேன் என்று கூறினார்.

    இந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்கட்சி தலைவரை முதலில் பேச அனுமதி அளியுங்கள். உரிமை மீறலை அப்புறம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சபாநாயகர், அனுமதித்தார். இதைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது என்று பேச தொடங்கினார்.

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளது என்று பொத்தாம் பொதுவாக கூறுவது எந்த வகையில் நியாயம்? எந்த பிரச்சினையில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு தான் பேச வேண்டும். இப்படி பேசக் கூடாது. எந்த ஆதாரமும் இல்லாமல் பேசக்கூடாது என்றார்.

    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, எதிர்க்கட்சி தலைவரை பேச விடுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தான் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போயிருந்தது. அதற்கான பட்டியல் உள்ளது. எதிர்க் கட்சி தலைவர் இப்படி பேசினால் நானும் பேசுவ தற்கு தயாராக உள்ளேன்.

    அதே நேரத்தில் பத்திரிகை செய்தியை அடிப்படையாக வைத்து அவர் பேசுவதற்கு அனுமதி அளிக்க கூடாது என்றார்.

    இந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒன்று பட்ட குரலில் பேசிக்கொண்டே இருந்தனர்.

    சபாநாயகர் அப்பாவு: இதுபோன்ற விஷயங்களை பேசும் போது அரசின் கவனத்தை ஈர்த்து தான் பேச வேண்டும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு உங்களிடம் (சபாநாயகர்) உரிய அனுமதி பெற்று தான் பேச முடியும். எதிர்க்கட்சி தலைவர் பேசினால், நானும் பேச தயாராக உள்ளேன். எங்கேயும் ஓடி ஒளிய மாட்டேன்.

    சபாநாயகர்: இன்று காலையில் உறுப்பினர் வேலுமணி நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் சில பிரச்சினைகள் குறித்து பேசுவார் என்று தெரிவித்து இருந்தார்.

    எடப்பாடி பழனிசாமி: இந்த அவையில் எதிர் கட்சி தலைவர் பேசுவதற்கு உரிய அனுமதியை நீங்கள் தருவதில்லை. அப்படியே நான் பேசினாலும் அதனை பதிவு செய்ய மாட்டீர்கள். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

    சபாநாயகர்: நீங்கள் குறிப்பிடும் சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது. கோர்ட்டிலும் அந்த வழக்கு விவகாரம் நிலுவையில் உள்ளது. அதைப்பற்றி இங்கே பேச அனுமதிக்க முடியாது.

    (அந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனை வரும் எழுந்து நின்று ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பி னார்கள். இதனால் அவை யில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது).

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவரை பேச விடுங்கள். அப்போது தான் அவர் என்ன பேசுகிறார் என்பது தெரியும்.

    எடப்பாடி பழனிசாமி: முதல்-அமைச்சர் பேசுவ தற்கு அனுமதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். என்னை பேச அனுமதிப்ப தில்லை. இது வருத்தம் அளிக்கிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் சபாநாயகரை பார்த்து இது போன்று பேசுவது மரபல்ல.

    சபாநாயகர்: அரசின் கவனத்தை ஈர்த்து தான் குறிப்பிட்ட பிரச்சினை பற்றி பேச முடியும்.

    எடப்பாடி பழனிசாமி:-நான் பேசுவது மக்கள் பிரச்சினை.

    சபாநாயகர்:-மக்கள் பிரச்சினை பற்றி உங்கள் கட்சி உறுப்பினர்கள் ஏற்கனவே, நிறைய பேசி விட்டனர். இன்று எந்த பிரச்சினை பற்றி பேசப் போகிறீர்கள் என்று நீங்கள் சொல்லவில்லை.

    எடப்பாடி பழனிசாமி:-வேண்டுமென்றே பேச அனுமதி மறுக்கிறீர்கள்.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்:-நான் எதிர்க் கட்சி தலைவராக இருந்த போது அப்போதைய சபா நாயகர் தனபாலிடம் உரிய அனுமதி பெற்றே இது போன்ற நேரங்களில் பேசி இருக்கிறேன்.

    எஸ்.பி.வேலுமணி (அ.தி.மு.க.):-அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு எப்போதுமே உரிய அனுமதியை வழங்கி இருக்கிறோம்.

    (இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தனது மைக்கில் பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் அவர் என்ன பேசுகிறார் என்று கேட்கவில்லை. அவரது மைக் ஆப் செய்யப்பட்டு இருந்தது).

    இதற்கிடையே சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவை பேச அழைத்தார். அவர் எழுந்து பேசிக் கொண்டு இருந்தார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய் தனர்.

    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இது போன்று ஓடி ஒளியக் கூடாது. என்ன பேசுகிறோம் என்பதை இங்கிருந்து கேட்க வேண்டும்" என்றார்.

    ஆனால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறினார்கள்.

    இதைதொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் விளக்கம் அளித்து சட்டசபையில் பேசினார்.

    அப்போது, "அ.தி.மு.க. ஆட்சியில் தான் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து இருந்தது" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    Next Story
    ×