search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    • பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விரைந்து சென்றனர்.
    • இன்று சித்ரா பவுர்ணமி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த 21-ந்தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வருகை தந்து தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்கிறார்களா? மது மற்றும் போதை பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் சோதனை செய்தனர்.

    பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விரைந்து சென்றனர். இன்று சித்ரா பவுர்ணமி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். சித்ரா பவுர்ணமியையொட்டி வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    Next Story
    ×