search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
    X

    உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

    • மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும்.
    • உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்.

    சென்னையில் இன்று மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் அருண் மிஷ்ரா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டமானது 1993-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையமானது 1997-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் 1996-ம் ஆண்டு அமைந்த பிறகுதான், மாநில மனித உரிமை ஆணையம் அமைப்பதற்கான அரசாணை 20.12.1996 அன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆணையம் அமைக்கப்பட்டது.

    அரசியலமைப்புச் சட்டத்தின் மிகமிக அடிப்படையான அம்சம் என்பதே மனித உரிமைகள்தான்.

    சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, எண்ணங்களை வெளியிடும் உரிமை, ஒன்றுகூடும் உரிமை, பணிகள் செய்யும் உரிமை, மத சுதந்திரம், கல்வி உரிமை, சொத்துரிமை, பாதிக்கப்பட்டால் அதற்காகத் தீர்வு காணும் உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதனைக் காக்கும் பொறுப்பும் கடமையும் அனைத்து அரசுகளுக்கும் உள்ளது.

    அந்தக் கடமையிலிருந்து நாங்கள் ஒருநாளும் தவறமாட்டோம் என்ற உறுதியை நான் இங்கே தருகிறேன்.

    மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.

    ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    இங்கு பேசிய உறுப்பினர் சொன்ன அந்தக் கோரிக்கையின்படி, ஆணையத்தின் விசாரணைக் குழுவில் காவல் துறையினரின் எண்ணிக்கை போதுமா னதாக இல்லை என்று சொன்னார். இது குறித்தும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும்.

    அதேபோல் மனித உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காகப் போராடி வருபவர்களையும் இதில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆராயப்படும்.

    மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். மனித உரிமைத் தகவல்கள் அனைத்தும் அனைத்து மக்களையும் சென்றடைய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.

    மனித உரிமைக் கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், அதனை எந்த வகையில் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்த பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.

    ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நெறி தவறாத ஆட்சி முறையே என்பதாகும். குறள் வழி நடக்கும் அறவழி ஆட்சியால், தமிழ் மக்களின் நலனையே முன்வைத்து செல்கிறோம். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து விழைகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து இந்நிகழ்ச்சியில், மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். குறிப்பாக, திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆட்சியர்கள், மதுரை காவல் ஆணையர், கோவை எஸ்பிக்கு விருது வழங்கப்பட்டது.

    Next Story
    ×