search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்தில் ரூ.8 லட்சம் மோசடி:  4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
    X

    நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்தில் ரூ.8 லட்சம் மோசடி: 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

    தனியாருக்கு குத்தகைக்கு விட்டு மோட்டார் பம்ப் பராமரிக்கப்பட்டதாக போலி ரசீது மூலம் நிதி கையாளப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்தில் 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை குடிநீர் மோட்டார் பம்ப் , குழாய் உள்ளிட்ட பொருட்கள் 8 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன.

    இதில் அரசின் வழிகாட்டுதல் மீறப்பட்டு தனியாருக்கு குத்தகைக்கு விட்டு மோட்டார் பம்ப் பராமரிக்கப்பட்டதாக போலி ரசீது மூலம் நிதி கையாளப்பட்டுள்ளது. அப்போதைய சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்தார்.

    அதன்படி லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கந்தசாமி சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு மேல் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இது குறித்து விசாரித்தார்.

    இதையடுத்து அப்போதைய நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக பணியாற்றிய மேகாநாதன், உதவி பொறியாளர்கள் மணிமாறன், செல்வராஜ், மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் மீது கூட்டு சதி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரிப்பு, அரசு நிதியை தவறாக பயன்படுத்துதல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி அரசு பணத்தை சொந்த பயன்பாட்டிற்கு மாற்றுதல் ஆகிய பிரிவிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×