search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு விரைவு பஸ்களில் கூரியர் சேவை அடுத்த மாதம் தொடங்க திட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அரசு விரைவு பஸ்களில் கூரியர் சேவை அடுத்த மாதம் தொடங்க திட்டம்

    • அரசு விரைவு பஸ்களில் குறைவான வாடகையில் 150 கிலோ வரை கொண்டு செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது.
    • லாரியில் பொருட்களை அனுப்பினால் ஒன்று அல்லது 2 நாட்கள் கழித்து தான் கிடைக்கும்.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் பார்சல் சர்வீஸ் தொடங்கப்பட உள்ளது. நீண்ட தூர பஸ் சேவையை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அளித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 1100 விரைவு பஸ்கள் இயக்கப் படுகின்றன.

    போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பார்சல் சேவையை தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களில் ஏற்கனவே இந்த சேவை கிடைக்கிறது.

    அதுபோல அரசு விரைவு பஸ்களில் குறைவான வாடகையில் 150 கிலோ வரை கொண்டு செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளையக்கூடிய விவசாய பொருட்கள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை விவசாயிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல அரசு விரைவு பஸ்களை பயன்படுத்தலாம்.

    இதற்கான கட்டணம் கிலோ மீட்டர் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக கிளை மேலாளர்களிடம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் பார்சல் சேவைக்கு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் கூரியர் சேவையும் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்கு பிறகு இச்சேவை தொடங்கும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    லாரி, தனியார் பஸ்களை விட அரசு விரைவு பஸ்களில் பொருட்களை கொண்டு செல்ல வாடகை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாரியில் பொருட்களை அனுப்பினால் ஒன்று அல்லது 2 நாட்கள் கழித்து தான் கிடைக்கும். அரசு விரைவு பஸ்களில் ஒரே நாளில் கூட பெறும் வசதி உள்ளது. இரவில் ஏற்றி மறுநாள் காலையில் பஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    இதேபோல கூரியர் சேவையும் தொடங்கப்பட உள்ளது. முதலில் சென்னை, மதுரை, திருச்சி நகரங்களுக்கு மட்டும் கூரியர் சேவை அளிக்கப்படும். அதன் பின்னர் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். இன்று பெறப்படும் தபால் கவர்கள் மறுநாள் பஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தால் சுவிக்கி, சுமோட்டா மூலம் வீடுகளுக்கே கடிதங்கள், உறைகளை (கவர்) வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×