என் மலர்
தமிழ்நாடு
தமிழக காவல்துறையில் 'ஸ்மார்ட் காவலர்' செயலி- டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம்
- சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி போலீஸ் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- இந்த புதிய செயலி போலீஸ்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும்.
காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் 'ஸ்மார்ட் காவலர்' என்ற புதிய செயலியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், போலீஸ் கமிஷனர்கள்(சென்னை) சங்கர் ஜிவால், (தாம்பரம்) அமல்ராஜ், (ஆவடி) சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி போலீஸ் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக போலீஸ் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும், தரவுகளை முறையாகவும், சிறப்பாக கையாளவும் 'ஸ்மார்ட் காவலர்' என்ற புதிய செயலியை சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
'ஸ்மார்ட் காவலர்' செயலி, காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.
இந்த புதிய செயலி போலீஸ்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.