என் மலர்
தமிழ்நாடு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல்- நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்
- நோயாளியின் உறவினர்களை கண்டித்து முதுநிலை மருத்துவர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவர் அபிஷேக்கை நோயாளியின் உறிவினர்கள் சிலர் தாக்கி உள்ளனர். மருத்துவர் அபிஷேப் நோயாளியின் உடல்நிலை குறித்து விவரித்துக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டிருக்கிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நோயாளியின் உறவினர்களை கண்டித்து முதுநிலை மருத்துவர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு போலீசார் குவிந்துள்ளனர்.
மேலும், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வௌியிட்டுள்ள கண்டனச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவர் அபிஷேக் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியின் உறவினர்களிடம் உடல்நிலை குறித்து விவரிக்கும்போது அவர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.
மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகளை தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அவர்களின் மீது மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டம் 2008 (HPA-2008)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறது.
மேலும் மருத்துவமனையின் பணியாளர் ஒருவர் பணியின்போது வன்முறைக்கு உள்ளாகியிருக்கும் இவ்வேளையில் கே.எம்.சி நிர்வாகம் மெத்தனப்போக்குடன் இல்லாமல் உடனடியாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியவர் மீது மருத்துவமனை சார்பாக புகாரளிக்க முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யும் டி கேட்டுக் கொள்கிறோம்.
கேரளத்தில் மருத்துவர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில் அத்தகைய நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கும்பொருட்டு வன்முறையாளர்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து மருத்துவப்பணியாளர்களின் பணிப்பாதுகாப்பை உறுதிசெய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.