search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பள்ளிகளில் போதிய கழிவறை இல்லாததால் மாணவர்கள் தவிப்பு- சிறுநீரை அடக்க முடியாத பயத்தில் தண்ணீர் குடிக்க தயக்கம்
    X

    பள்ளிகளில் போதிய கழிவறை இல்லாததால் மாணவர்கள் தவிப்பு- சிறுநீரை அடக்க முடியாத பயத்தில் தண்ணீர் குடிக்க தயக்கம்

    • ஒரு சில பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படையான கழிவறை வசதி போதுமான அளவு இல்லாத நிலை இன்னும் இருந்து வருகிறது.
    • மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன.

    ஸ்மார்ட் வகுப்பறை, பாதுகாப்பான குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதில் கல்வித் துறை உறுதியாக உள்ளது. "நம்ப பள்ளி நம்ம ஊரு" திட்டத்தில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மூலம் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

    ஒரு சில பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படையான கழிவறை வசதி போதுமான அளவு இல்லாத நிலை இன்னும் இருந்து வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    சோழிங்கநல்லூர் மூட்டைக்காரன் ரோட்டில் உள்ள அரசு பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் அங்கு 2 கழிவறை மட்டுமே உள்ளன. இதே போல அம்பத்தூர் கள்ளிக்குப்பம் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு கழிவறையும் மாணவிகளுக்கு ஒரு கழிவறையும் உள்ளன. ஆனால் அங்கு 442 பேர் படித்து வருகிறார்கள்.

    எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 312 மாணவிகளுக்கு ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ளன. எண்ணூர் நெட்டுகுப்பத்தில் உள்ள மாணவர்களுக்கான பள்ளியில் கழிப்பிடம் புதுப்பிக்கப்படுகிறது.

    அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் இதைவிட மோசமான நிலை உள்ளது. 3,500 பேர் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதி இல்லை. மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ள ஒரே ஒரு கழிவறையை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த பள்ளியில் 10 நிமிடங்கள் இடைவேளை விடப்படுகிறது. அதற்குள்ளாக மாணவர்கள் அனைவரும் எப்படி சிறுநீர் கழிக்க முடியும். வாரத்தின் கடைசி நாள் அல்லது பள்ளி நேரத்தில் தான் கழிவறை சுத்தம் செய்யப்படுகிறது.

    அதிக மாணவர்கள் கொண்ட பள்ளியில் சிறுநீர் கழிப்பதற்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். ஆனால் ஒன்று அல்லது 2 கழிவறைகள் மட்டுமே இருப்பதால் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி றார்கள்.

    சில பள்ளிகளில் குடிநீர் குடிக்கவே அனுமதி மறுக் கப்படுகிறது. தண்ணீர் குடித்தால் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை வரும் என்பதால் அதனை தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது.

    கழிவறைகள் சுத்தம் இல்லாமல், முறையாக பராமரிக்காமல் இருப்பதால் மாணவர்கள் உள்ளே செல்லவே தயங்குகிறார்கள். கழிவறை வசதி போதுமான அளவு இல்லாததால் மாணவ-மாணவிகள் சிறுநீரை அடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்க மாணவிகள் வரிசையில் காத்து நின்று செல்லும் நிலையும் உள்ளது.

    வகுப்பு அறையில் சிறுநீரை அடக்க முடியாமல் இடைவேளை நேரத்தில் ஓடிச் செல்கின்ற நிலையும் காணப்படுகிறது. கழிவறை வசதி இல்லாததால் சிறுநீர் கழிக்க பயந்து தண்ணீர் குடிக்கவே தயக்கம் காட்டுகிறார்கள்.

    எனவே அரசு பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால்தான் மாணவர்கள் நன்றாக படிக்க முடியும். குடிநீர், கழிவறை வசதி மிக மிக முக்கியமானது. அவற்றை தேவைக்கேற்ப கட்ட வேண்டும். முறையாக பராமரிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

    Next Story
    ×