search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 2-வது முக்கிய புள்ளிக்கு குறி
    X

    ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 2-வது முக்கிய புள்ளிக்கு குறி

    • டெல்லிக்கு நேரில் அழைத்து அமீரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக துருவித் துருவி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.
    • அமீரை போன்று அரசியல் பிரமுகரையும் டெல்லிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருவதாக கூறிக் கொண்டு 'சூட்டோ பெட்ரின்' போதைப் பொருளை கடத்திய ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சுருட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருள் கடத்தலில் நேரடியாக ஈடுபட்டவர்கள் ஆவர். இந்த 5 பேரை தவிர போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கலாம் என்கிற சந்தேகம் அமலாக்கத்துறையினருக்கு ஏற்பட்டது.

    இது தொடர்பாக அவரோடு தொடர்பில் இருந்தவர்களை அமலாக்கத்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து உள்ளனர். அந்த வகையில் இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    டெல்லிக்கு நேரில் அழைத்து அமீரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக துருவித் துருவி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இதையடுத்து ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 2-வது முக்கிய புள்ளிக்கும் அமலாக்கத்துறையினர் குறி வைத்துள்ளனர். சினிமா வட்டாரத்தில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த மேலும் சிலர் அமலாக்கத்துறை அதிகாரிகளின் அடுத்த கட்ட விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    அமீரை தொடர்ந்து அடுத்து சிக்கப்போகும் நபர் அரசியல் பிரமுகர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக்குக்கு அரசியல் ஆசையை தூண்டி விட்டு கோடிக்கணக்கில் பணம் வாங்கி இருப்பதாக கூறப்படும் அந்த அரசியல் பிரமுகரிடம் அமலாக்கத்துறையினர் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குறிப்பிட்ட அந்த அரசியல் பிரமுகரிடம் முறைப்படி விசாரணை நடத்த முடிவு செய்துள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் அவருக்கு விரைவில் சம்மன் அனுப்ப உள்ளனர். அமீரை போன்று அரசியல் பிரமுகரையும் டெல்லிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பான ஆதாரங்களை திரட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த விசாரணையின் போது ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் இருக்கும் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×