search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2026-ல் மக்கள் விரும்பும் வலுவான கூட்டணியை அமைப்போம்... எடப்பாடி பழனிசாமி
    X

    2026-ல் மக்கள் விரும்பும் வலுவான கூட்டணியை அமைப்போம்... எடப்பாடி பழனிசாமி

    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
    • ஒன்றிய செயலாளர்கள் அனைவரும் உங்கள் பகுதியில் ஓட்டுகள் குறையாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று தொடங்கி உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சிவகங்கை, வேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

    மாலையில் திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். இந்த ஆலோசனையின் போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டுள்ளார்.

    அப்போது பலர் காரசாரமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகள் சிறப்பாக செயல்படாவிட்டால் பதவியில் நீடிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

    நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நிச்சயமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழ்மட்ட நிர்வாகிகளை மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் கீழ்மட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்போடு பணியாற்றுவார்கள். மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் இன்று சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிவடைந்திருந்தது.

    இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் வலுவான கூட்டணியை அமைப்போம். ஆனால் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    ஒன்றிய செயலாளர்கள் அனைவரும் உங்கள் பகுதியில் ஓட்டுகள் குறையாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி குறைந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×