search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை தொடங்குகிறது... 29-ந்தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு
    X

    என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை தொடங்குகிறது... 29-ந்தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு

    • சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, 1,99,868 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
    • சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு 25 -ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது.

    சென்னை:

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே மாதம் 6-ந்தேதி முதல் ஜூன் 6-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்தனர்.

    மாணவர்களின் கோரிக்கைகளையேற்று என்ஜினீயரிங் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

    தமிழ்நாடு முழுவதும் என்ஜினீயரிங் படிப்புக்கு 2,53,954 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பதிவு செய்து கட்டணம் செலுத்தியவர்கள் 2,09,645 பேர் ஆவார்கள்.

    சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, 1,99,868 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிங் நடப்பு கல்வியாண்டில் 2,32,376 இடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை (திங்கட்கிழமை)தொடங்குகிறது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான (7.5 சதவீத இடஒதுக்கீடு) கலந்தாய்வு 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடைபெறும். அதை தொடர்ந்து சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு 25 -ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது.

    விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடி கலந்தாய்வாக இருக்கும். மற்றவர்களுக்கு வழக்கம்போல் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும். விளையாட்டுப் பிரிவில் 2,112 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 408 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,223 பேரும், சிறப்புப் பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டு பிரிவின்கீழ் 386 பேரும் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.

    பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து, பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையும், எஸ்.சி. அருந்ததியர் பிரிவில் ஏற்படும் காலி இடங்களில் எஸ்.சி. பிரிவு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10,11-ந்தேதிகளிலும் நடைபெறும். செப்டம்பர் 11-ந்தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும்.

    என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் 441 கல்லூரிகள் பங்கேற்கின்றன.

    Next Story
    ×