search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடுமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
    X

    உடுமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

    • உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
    • வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றது.

    இந்த வனச்சரகங்களில் ஆண்டு தோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

    அந்த வகையில் கடந்த 23-ந்தேதி உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் கோடைகால கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணி நேற்று நிறைவடைந்தது. மொத்தம் 6 நாட்கள் நடைபெற்றது.உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வன சகரங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

    இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டது. வனப் பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முதல் 3 நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.

    அடுத்த 3 நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்பட்டது.மேலும் யானைலத்தி, காட்டெருமைசாணம், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, அனுமன்மந்தி, நீலகிரி மந்தி, சிங்கவால்குரங்கு ஆகியவற்றின் புழுக்கை மற்றும் சாணங்கள் குறித்தும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட்டது. இறுதி நாளான இன்று கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த கணக்கெடுப்பு பணியில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் மேற்பார்வையில் வனச்சரகர்கள் சிவக்குமார் (உடுமலை), சுரேஷ் (அமராவதி), மகேஸ் (கொழுமம்), முருகேசன் (வந்தரவு) தலைமையிலான வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புகாவலர்கள் ஈடுபட்டனர்.

    Next Story
    ×