search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்படையினர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு
    X

    துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்படையினர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

    • உள் காயம் ஏற்பட்டதாக கூறி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
    • விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என்று கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்தனர்.

    காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடந்த 15ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரவேல் (வயது 30 ). நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த செல்வத்துரை, செல்வகுமார், சதீஷ் உள்பட 10 மீனவர்கள் படகில் சென்று மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    நேற்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு கப்பலில் ரோந்து வந்த இந்திய கடற்படையினர் சந்தேகம் அடைந்து படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர். இந்த நேரத்தில் மழை பெய்ததாலும் இருள் சூழ்ந்து காணப்பட்டதாலும் இந்த எச்சரிக்கையை கவனிக்காமல் படகு சென்றது.

    இதனால் மேலும் சந்தேகமடைந்த இந்தியா கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர் வீரவேல் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து படகு அருகில் வந்த இந்திய கடற்படையினர் தாங்கள் சுட்டது தமிழக மீனவர்தான் என்பதை உணர்ந்து உடனடியாக வீரவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து வீரவேல் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்த நிலையில் மீனவர் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் , கொலை முயற்சி, மிக கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து இந்திய கடற்படை வீரர்களிடம், எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினீர்கள்? முறைப்படி எச்சரிக்கை சமிக்ஞை செய்தீர்களா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என்று கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்தனர்.

    தற்கிடையே துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வீரவேலுடன் மீன் பிடித்த சக மீனவர்கள் 9 பேரும் கரைக்கு திரும்பினர். பின்னர் உள் காயம் ஏற்பட்டதாக கூறி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    சிகிச்சை முடிந்து வெளியே வந்தவர்களில் சிலர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்காணிப்பது வழக்கமாக இருந்து வந்தது.

    ஆனால் தற்பொழுது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது வேதனை அளிக்கிறது. துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்திற்கு பின்னர் இந்திய கடற்படையினர் சிலர் எங்களை கட்டி வைத்து இரும்பு கம்பியால் தாக்கினர். எதனை கடலில் தூக்கி போட்டீர்கள் என விசாரித்தனர். நாங்கள் ஒன்றுமே போடவில்லை என எவ்வளவு கூறியும் கேட்கவில்லை.

    மேலும் படகு முழுவதும் சோதனை இட்டனர். அதன் பின்னரே படகில் இருந்து அவர்கள் வெளியேறினர். எங்களுக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெற்றோம். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மீனவர் மீது துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதால் இந்த வழக்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளது. விசாரணை முடிவில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×