search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பராமரிப்பை தனியாரிடம் விடப்படுகிறது
    X

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பராமரிப்பை தனியாரிடம் விடப்படுகிறது

    • வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் விமான நிலைய மாதிரியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புற நகர் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.

    சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393 கோடி செலவில் பிரமாண்டமாக நவீன வசதிகளுடன் அமைகிறது.

    தினந்தோறும் 1½ லட்சம் பயணிகளை கையாளும் வகையில் ஒரே நேரத்தில் 200 பஸ்கள், 270 கார்கள், 3500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் புதிய பஸ் நிலைய பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளை முதல் முறையாக தனியாரிடம் வழங்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்து உள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளதாக தெரிகிறது.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் விமான நிலைய மாதிரியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு உயர்ந்த தரத்திலான சேவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    தூய்மை பணிகளை தினந்தோறும் மேற்கொள்ளவும், பஸ் நிலையத்தை பராமரித்து செயல்படுத்தும் பணிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான டெண்டர் விரைவில் விடப்படும். சரியான நிறுவனம் தேர்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, "பஸ் நிலைய பராமரிப்பை தனியாருக்கு விடும்போது சி.எம்.டி.ஏ. கண்காணிக்க வேண்டும். பயணிகள் மற்றும் பொது மக்களிடம், வாகனங்கள் நுழைவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், கடைகள், ஓட்டல்களில் தரமான உணவு பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

    சமீபத்தில் பெய்த மழையின் போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் முன்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது குறிப்பிடத்தக்கது. தண்ணீர் தேங்குவதை தடுக்க ஜி.எஸ்.டி. சாலையை தாண்டி கால்வாய் மூலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 'கல்வெட்டு' அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    இந்த பணி முடிந்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு இருக்கும் என்று தெரிகிறது.

    Next Story
    ×