என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கேரளாவில் களையிழந்த ஓணத்தால் பூக்கள் சாகுபடி செய்த கோவை விவசாயிகள் ஏமாற்றம்
- இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- வழக்கமான ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டக் கூடிய ஓணம் பண்டிகை தற்போது களையிழந்து விட்டது.
பேரூர்:
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் அனைத்து மக்களாலும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓணம் பண்டிகையில் மிக முக்கியமாக இடம் பெறுவது பூக்கள் தான். 10 நாட்களும் மகாபலி மன்னனை பூவுலகுக்கு வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிடுவது வழக்கம்.
இதனையொட்டி விழா தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே கேரளாவில் மலர்கள் விற்பனை சூடுபிடித்து விடும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பாக கேரளாவின் அருகே உள்ள தமிழக மாவட்டமான கோவையில் இருந்து தான் அதிகளவில் பூக்கள் விற்பனைக்கு செல்கின்றன. ஓணம் பண்டிகைக்காகவே, பிரத்யேகமாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, அறுவை செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவையில் பூக்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு, ஓணம் விழாவுக்கு அவர்கள் வாங்கி செல்வார்கள். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளுக்கும், அந்த 10 நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஓணம் பண்டிகை வந்தால் சில நாட்களுக்கு முன்பிருந்தே கேரளா மாநிலம் முழுவதும் விழா களைகட்ட தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு தான். இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர்.
இப்படி மக்கள் இன்னல்களில் தவிப்பதால் கேரள அரசு இந்த ஆண்டு ஓணம் பண்டிகை அரசால் கொண்டாடப்படாது என அறிவித்து விட்டது. இதனால் அரசு கல்லூரிகள், அரசு சம்பந்தமான அலுவலகங்களில் நடைபெறும் அனைத்து ஓணம் விழாக்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன.
தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும், தாங்களும் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என தெரிவித்து விட்டனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவில் ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடுகிறார்கள். இதனால் வழக்கமான ஆட்டம்பாட்டத்துடன் களைகட்டக் கூடிய ஓணம் பண்டிகை தற்போது களையிழந்து விட்டது.
கேரளாவில் ஓணம் பண்டிகை விழா களையிழந்ததால், இந்த விழாவை நம்பி மலர்களை பயிரிட்டிருந்த தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான வடிவேலம்பாளையம், மோளபாளையம், மங்கலபாளையம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஓணம் பண்டிகையை எதிர்பார்த்து, அதிகளவில் செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிக்கொண்டை உள்பட பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டிருந்தனர். பூக்களும் பூத்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது.
தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்ததால், அங்கு இருந்து எந்தவித ஆர்டர்களும் கோவைக்கு வரவில்லை. இதனால் விவசாயிகளிடம் இருந்து பூக்களை வாங்க வியாபாரிகளும் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். அவை செடியிலேயே கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் பூக்களை பறித்து தோட்டத்தின் ஓரத்தில் கொட்டி செல்கிறார்கள்.
இந்த பகுதிகளில் உள்ள தோட்டங்களையொட்டி சாலையோரங்கள் மற்றும் வயல்வெளி ஓரங்களில் அதிகளவில் பூக்கள் கொட்டி கிடப்பதையும், அவற்றை கால்நடைகள் உண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.
ஓணம் பண்டிகை வந்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் அந்த 10 முதல் 12 நாட்களும் மலர் விற்பனை அமோகமாக இருப்பதால் வியாபாரிகள் போட்டி போட்டு எங்களிடம் இருந்து பூக்களை வாங்கி செல்வார்கள். பூக்களுக்கும் நல்ல விலை இருக்கும். இதனால் விற்பனை சூடுபிடித்து, விலையும் கிடைத்து வருவதால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.
ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் களையிழந்ததால், வழக்கமாக பூக்களை ஆர்டர் செய்பவர்களில் சிலர் மட்டுமே ஆர்டர் கொடுக்கிறார்கள்.
குறிப்பாக வாடாமல்லி பூக்களுக்கு அதிகளவில் வரவேற்பு இருக்கும். தற்போது 150 ஏக்கர் பரப்பளவில் வாடமல்லி, கோழிக்கொண்டை உள்பட பல்வேறு வகையான மலர்களை பயிரிட்டு, 6 மாதமாக விவசாயிகள் அதனை பாதுகாத்து வந்தனர். ஆனால் தற்போது விற்பனை இல்லாதது அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக 25 டன் பூக்கள் இங்கிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது 5 டன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. ஆர்டர்கள் வராததால் வியாபாரிகளாகிய நாங்களும், இதனை நம்பி தொழில் செய்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறும்போது, ஓணம் பண்டிகை வந்தால் செண்டுமல்லி, கோழிகொண்டை, வாடாமல்லி உள்ளிட்ட பூக்கள் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளதால் செண்டு மல்லி ரூ.20 முதல் ரூ.40க்கும், கோழிகொண்டை ரூ.50க்கும், வாடாமல்லி ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்