search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தங்கு தடையில்லாமல் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்
    X

    அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தங்கு தடையில்லாமல் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

    • விலை அதிகம் உள்ள மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு சென்று சேர்வதில்லை.
    • நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயநோய்கள் போன்றவற்றிற்கு உரிய நேரத்தில் மருந்தை உட்கொண்டால் தான் நோய் கட்டுக்குள் வரும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகமெங்கும் ஏழை, எளிய பொதுமக்கள் தங்களுடைய நோய்களுக்கான மருத்துவத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு பொது மருத்துவமனைகளிலும் மேற்கொள்கிறார்கள்.

    நீரிழிவு நோய், இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு ஏழை, எளிய மக்கள் பெரிதும் அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் இவ்வகை நோய்களுக்கான மருத்துவ கட்டணங்களும், மருந்து மாத்திரைகளும் விலை அதிகம். பொருளாதார ரீதியாக சிரமப்படும் ஏழை, எளிய மக்களால் அவற்றை வாங்க இயலாது.

    இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளை நாடும் இவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பல்வேறு மருந்துகள் மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர்கள் நீங்கள் வேண்டுமென்றால் வெளியில் வாங்கிகொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.

    அவ்வகை மருந்தின் விலை தனியார் மருந்தகங்களில் மிக அதிகமாக இருக்கிறது. அவற்றை பொதுமக்களால் வாங்க இயலாமல் நோயுடன் போராடும் அவல நிலைதான் ஏற்படுகிறது. இலவசமாக மருத்துவம் பார்த்துகொள்ள வாய்ப்பிருந்தும் அதனால் பயனில்லாமல் போவது கொடுமையிலும், கொடுமை.

    விலை அதிகம் உள்ள மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு சென்று சேர்வதில்லை. நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயநோய்கள் போன்றவற்றிற்கு உரிய நேரத்தில் மருந்தை உட்கொண்டால் தான் நோய் கட்டுக்குள் வரும். ஆனால் ஒருசில மருந்துகளை நேரத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும். இருந்த பொழுதிலும் அரசு மருத்துவனைகளின் நிர்வாகிகள் அலட்சியமாக இருப்பது, மிகவும் வருந்தத்தக்கது.

    அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும், தங்குதடையின்றி கிடைக்க தமிழக அரசு, வழிவகை செய்ய வேண்டும். மக்கள் உடல் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும். முன்னெச்சரிக்கையாக தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். ஆகவே மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான மருத்துவத்தை முழமையாக அளிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×