என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முறையான கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்
- குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையை முதற்கட்டமாக அகற்றவேண்டும்.
- மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் உயிரிழந்த த.மா.க நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார். அதனைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கீடு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது 19-ந்தேதி முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் தற்போது வந்துள்ள அறிவிப்பு அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையை முதற்கட்டமாக அகற்றவேண்டும். மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெற்பயிர் மட்டுமின்றி வாழை, தென்னை, மானாவாரி பயிர்களும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அரசு இதில் உரிய கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்.
தற்போது குறிப்பிட்ட சில தாலுகாக்களுக்கு மட்டும் ரேசன்கார்டுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும். சோகத்தில் உள்ள விவசாயிகளுக்கு அரசு ஆறுதலான நிவாரணம் வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






