search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தங்க நகைக்கடையில் மக்கள் கூட்டம்
    X

    தங்க நகைகள் விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு - கடைகளில் அலைமோதிய கூட்டம்

    • இறக்குமதி வரி குறைக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது.
    • தங்கத்தின் மீதான மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ளனர்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.44 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை திடீரென்று அதிகரிக்க தொடங்கியது. கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஒரே ஆண்டில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.11 ஆயிரம் அதிகரித்திருப்பது சாதாரண மற்றும் நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ஆனாலும் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கம் விலை உயர்வு கூடுதல் சுமையாகவே இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிகரித்து வந்ததை கண்டு நகை வியாபாரிகளும், நகை வாங்குவோரும் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.54,600-க்கு விற்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் ஒரு கிராம் ரூ.275 குறைந்து ரூ. 6,550-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு மேலும் ரூ.480 குறைந்தது. இதனால் இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.51,920-க்கு விற்கப்படுகிறது. இறக்குமதி வரி குறைக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.335 குறைந்துள்ளது.


    இதையடுத்து தங்கத்தின் மீதான மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ளனர். மேலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் இன்று வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நகைக்கடைகளில் இன்று தங்க நகைகள் விற்பனை அதிகரித்தது.

    இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-

    மத்திய அரசு வருவாயை பெருக்குவதற்காக இதற்கு முன்பு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதனால் அப்போது தங்கம் விலை அதிகரித்தது. இதையடுத்து தங்க நகைகள் விற்பனையும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இறக்குமதி வரி 9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் விலையும் 9 சதவீதம் குறைந்துள்ளது.

    இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலை இந்த அளவிலேயே நீடிக்கும். இப்போதைக்கு விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தால் மட்டுமே தங்கம் விலை இனி மாற வாய்ப்பு உள்ளது. அதுவரை இந்த விலைதான் நீடிக்கும்.

    தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இன்று காலையில் இருந்தே நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. தங்க நகைகள் விற்பனையும் அதிகரித்தது. இன்று மட்டும் தங்க நகைகள் விற்பனை 10 சதவீதம் அதிகரித்தது.

    இனிவரும் நாட்களில் தங்கம் விலை இதே நிலையில் நீடிக்கும் நிலையில் தங்க நகைகள் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நடுத்தர, ஏழை, எளிய மக்கள் அதிகளவில் தங்க நகையை வாங்குவார்கள்.

    தற்போது ஆடி மாதம் என்பதால் நகைக்கடைகளில் சிறப்பு விற்பனையும் நடந்து வருகிறது. இதன்படி தங்க நகைகள் வாங்குபவர்களுக்கு விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆடி மாதத்தில் தங்க நகைகள் விற்பனை களை கட்டும்.

    அடுத்த மாதம் ஆவணி மாதம் திருமண சீசன் என்பதால் இன்னும் 2 மாதங்களுக்கு நகைகள் விற்பனை நன்றாக இருக்கும். இதனால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைத்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் வெள்ளி மீதான இறக்குமதி வரியும் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி விலையும் 2 நாட்களில் கிராமுக்கு 4 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்துள்ளது. இதனால் வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் விற்பனையும் இன்று அதிகரித்துள்ளது.

    பிளாட்டினம் மீதான இறக்குமதி விலையும் 15.4 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாட்டினம் நகைகளும் அதிகமாக விற்பனையாகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×