search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலக்கை அடைந்த காவேரி... கிரீன்வேஸ் To  அடையாறு வரையிலான சுரங்கப்பணி நிறைவு
    X

    இலக்கை அடைந்த காவேரி... கிரீன்வேஸ் To அடையாறு வரையிலான சுரங்கப்பணி நிறைவு

    • சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள் 65 முறை சீரமைக்கப்பட்டு சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு தற்போது அடையாறு நிலையத்திலிருந்து 277 மீட்டர் தொலைவில் உள்ளது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.

    வழித்தடம் 3-இல், கிரீன்வேஸ் நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள் பிப்ரவரி 2023-இல் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 1228 மீட்டர் ஆகும். சுரங்கப்பாதைகள் அடையாறு ஆற்றின் கீழ் 300 மீட்டர் நீளத்திற்கு 10-13 மீட்டர் தரைமட்டத்திற்கு கீழ் செல்கின்றன. காவேரி மற்றும் அடையாறு என்ற இரண்டு பூமி அழுத்த சமநிலை (Earth Pressure Balancing - EPB) சுரங்கம் தோண்டும் இயந்திரகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. காவேரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு அடையாறு நிலையத்தை வந்தடைந்தது.

    இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், சுரங்கத்தின் அடிப்பகுதி பாறை மற்றும் மேற்பகுதி மணல்போன்ற கலப்பு புவியியல் நிலைமைகளைக் கடந்து வந்துள்ளது. மேலும், அடையாறு ஆற்றின் சிலபகுதிகளின் கீழ் கடினமான பாறைகளின் வழியாகவும் சுரங்கப்பாதையை அமைத்தது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள் 65 முறை சீரமைக்கப்பட்டு சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளுக்கு மட்டும் 178 நாட்கள் தேவைப்பட்டது.

    காவேரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் சில பெட்ரோல் பங்குகள், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி, ஆந்திர சபா மருத்துவமனை, துர்காபாய் தேஷ்முக் சாலை மற்றும் அடையார் பாலம் கீழேயும் கடந்து சென்றது. இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு தற்போது அடையாறு நிலையத்திலிருந்து 277 மீட்டர் தொலைவில் உள்ளது மற்றும் நவம்பர் 2024-க்குள் அடையாறு நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், பொதுமேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி (சுரங்கப்பாதை கட்டுமானம்), ரவிச்சந்திரன் (சுரங்கப்பாதை கட்டுமானம்), லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் ஜெயராம், திட்ட இயக்குநர் அஹ்மத், பொது ஆலோசகர் நிறுவனத்தின் அணித்தலைவர் டோனி புர்செல், பொது ஆலோசகர் நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் சஞ்சீவ் மண்டல், சுரங்கப்பாதை நிபுணர் ஆலன் சார்லஸ்மே, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

    Next Story
    ×