search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட 4 பேருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட 4 பேருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    • உள்துறை செயலர் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் 6 சதவீத வட்டியுடன் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும்.
    • வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் மனுதாரர்கள் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், வரதராஜன் கடலைமுத்து மற்றும் யேசுதாசன் ஆகியோருக்கும் பக்கத்து வீட்டுகாரருக்கும் இடையே கடந்த 2013ல் சிவில் பிரச்சினை இருந்தது.

    இந்த விவகாரத்தில் தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் செல்வம், காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து பேசியுள்ளார். இதற்கு 4 பேரும் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் அப்போது நடந்த இரட்டை கொலையில் 4 பேரையும் சேர்த்துள்ளார். இதனால் வரதராஜன், கடலைமுத்து மற்றும் யேசுதாசன் ஆகியோர் 92 நாட்களும், பரமசிவம் 53 நாளும் சிறையில் இருந்துள்ளார். இதற்காக இழப்பீடும், இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கையும் கோரி 4 பேரும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு செய்தனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் இறந்ததால், அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் தனது உத்தரவில் கூறியதாவது:-

    மனுதாரர்கள் 4 பேரும் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர். இன்ஸ்பெக்டர் இறந்ததால் எப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது மட்டும் தான் கேள்வியாக உள்ளது. எனவே, அரசு தான் இழப்பீடு வழங்க வேண்டும்.

    வரதராஜன் கடலை முத்து மற்றும் யேசுதாசன் ஆகியோர் நாளொன்றுக்கு ரூ. 7500 வீதம் தலா ரு. 6.90 லட்சமும். பரமசிவம் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 500ம் இழப்பீடு பெற தகுதி உள்ளது.

    இதை உள்துறை செயலர் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் 6 சதவீத வட்டியுடன் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் மனுதாரர்கள் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×