search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராய விவகாரம்- சஸ்பெண்ட் செய்யப்பட்ட மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
    X

    மரியே சோபி மஞ்சுளா

    கள்ளச்சாராய விவகாரம்- சஸ்பெண்ட் செய்யப்பட்ட மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்

    • மரக்காணம் மது விலக்கு போலீஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மரக்காணத்தில் இயங்கி வந்தது.
    • கீழ்புத்துப்பட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு புதுவையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுப்பப்படும்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மரக்காணம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், மரக்காணம் மது விலக்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 4 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு மெத்தனால் அளித்த தொழிற்சாலை உரிமையாளர் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மரக்காணம் மது விலக்கு போலீஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மரக்காணத்தில் இயங்கி வந்தது. அதே போல கீழ்புத்துப்பட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு புதுவையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுப்பப்படும்.

    இந்நிலையில் செஞ்சியை பூர்வீகமாக கொண்ட மரியே சோபி மஞ்சுளா சில ஆண்டுகளுக்கு முன்பாக மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற உடனேயே மரக்காணத்தில் இயங்கி வந்த மது விலக்கு போலீஸ் நிலையம் கோட்டக்குப்பத்திற்கு மாற்றப்பட்டது.

    கீழ்புத்துப்பட்டு சோதனை சாவடியும் சரிவர இயங்கவில்லை. இதனால் மரக்காணம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக புதுவையில் இருந்து கடத்தி வரப்படும் சாராய விற்பனை படுஜோராக நடந்தது. இதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் மது விலக்கு போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முடியாத வியாபாரிகள், மெத்தனாலை வாங்கி அதில் டிகிரி பார்த்து நீர் ஊற்றி, புதுவை சாராயம் போலவே பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

    மரக்காணம் பகுதியில் உள்ள மது பிரியர்கள், இது புதுவையில் இருந்து கொண்டு வரப்பட்ட சாராயம் என்று நினைத்து வாங்கி குடித்தனர். இதில் மயங்கி விழுந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இதுவரை எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    எனவே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மது விலக்கு இன்ஸ்பெக்டர் மரியே சோபி மஞ்சுளாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர் வாய் திறந்தால் மட்டுமே நடந்தது என்ன? இதில் யார்? யார்? தொடர்பில் இருக்கிறார்கள்? என்பன போன்ற பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தெரியவருகிறது.

    Next Story
    ×